Published : 02 Nov 2020 03:14 AM
Last Updated : 02 Nov 2020 03:14 AM

‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் – 2020’ஐ முன்னிட்டு ‘என்எல்சி இந்தியா நிறுவனம்’, ‘இந்து தமிழ் திசை’ நடத்திய பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் விநாடி-வினா போட்டி: அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் உற்சாகமாக பங்கேற்பு

ஆன்லைன் மூலம் நடைபெற்ற விநாடி-வினா போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்.

சென்னை

‘என்எல்சி இந்தியா நிறுவனம்’, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து நடத்திய பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஆன்லைன் விநாடி-வினா போட்டியில் ஆயிரக்கணக்கான அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் உற்சாகத்தோடு பங்கேற்றனர்.

‘நேர்மையே வாழ்க்கையின் வழி’ என்பதை நோக்கமாகக் கொண்டு ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் – 2020’ அக்.27 முதல் நவ.2 வரை நாடெங்கும் கடைபிடிக்கப்பட்டது.

இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம், கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழோடு இணைந்து பள்ளி மாணவ - மாணவிகளிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கில் கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு ‘விழிப்பான இந்தியா;வளமான இந்தியா’ எனும் கருப்பொருளில் ஊழல் எதிர்ப்பு குறித்த சமூக விழிப்புணர்வைப் பரப்பும் நோக்கத்தில் ‘என்எல்சி இந்தியா நிறுவனம்’, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான விநாடி-வினா போட்டியை நடத்தின.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், வீட்டிலிருக்கும் குழந்தைகளின் சமூக அக்கறையையும், அறிவியல் ஆர்வத்தையும், விழிப்புணர்வையும் தூண்டும் வகையில் 5-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற ஆன்லைன் வழியேயான விநாடி - வினா போட்டி நடத்தப்பட்டது.

இப்போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ -மாணவிகள் கலந்துகொண்டனர். சென்னை, புதுச்சேரி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயமுத்தூர், சேலம், வேலூர் என 8 மண்டலங்களாகப் பிரித்து, இந்த விநாடி-வினா போட்டி நடத்தப்பட்டது.

5, 6, 7-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் ஜூனியர் பிரிவிலும், 8, 9, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் சீனியர் பிரிவிலும் பங்கேற்றனர். ஜூனியர்களுக்கான போட்டி அக்.29-ம் தேதியும், சீனியர்களுக்கான போட்டி அக்.30-ம் தேதியும் நடைபெற்றன. 8 மண்டலங்களிலும் சேர்த்து ஜூனியர் பிரிவில் 2,400 பேரும், சீனியர் பிரிவில் 2,842 பேரும் போட்டியில் பங்கேற்றனர்.

அக்.31-ம் தேதி ஞாயிறன்று நடைபெற்ற ஜூனியர் இறுதிப்போட்டியில் 8 மண்டலங்களில் நடைபெற்ற விநாடி-வினா போட்டிகளில் தேர்வுபெற்ற தலா ஒருவர் வீதம் பங்கேற்றனர்.

ஜூனியர் பிரிவில் நெல்லை மண்டலத்தில் இருந்து தென்காசி பாரத் வித்யா மந்திர் சீனியர் செகண்ட்ரி பள்ளி 5-ம் வகுப்பு மாணவன் சி.பிரனித் சுந்தர், திருச்சி மண்டலத்தில் இருந்து ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா சீனியர் செகண்ட்ரி பள்ளி 5-ம் வகுப்பு மாணவி ஏ.அனுஷ்கா, மதுரை மண்டலத்தில் இருந்து சிஇஒஏ மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்ட்ரி பள்ளி 5-ம் வகுப்பு மாணவி எஸ்.ஹர்ஷிதா, புதுச்சேரி மண்டலத்தில் இருந்து கடலூர் ஜவஹர் ஹையர் செகண்ட்ரி பள்ளி (சிபிஎஸ்இ) 5-ம் வகுப்பு மாணவி டி.சஞ்சனா ஆகியோரும்,

சென்னை மண்டலத்தில் இருந்து செயிண்ட் பிரிட்டோஸ் அகாடமி பள்ளி 6-ம் வகுப்பு மாணவன் இ.விஜய ராஜேஸ்வர், வேலூர் மண்டலத்தில் இருந்து செய்யாறு  மகாவீரா நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி 5-ம் வகுப்பு மாணவன் டி.பவன், கோவை மண்டலத்தில் இருந்து லெசிக்ஸ் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்ட்ரி பள்ளி 6-ம் வகுப்பு மாணவன் பி.ஷிவரன், சேலம் மண்டலத்தில் இருந்து கேஎஸ்ஆர் அக்‌ஷரா அகாடமி பள்ளி 6-ம் வகுப்பு மாணவன் கே.கார்த்திக் சர்வேஷ் ஆகியோரும் பங்கேற்றனர்.

அதேபோல், சீனியர் பிரிவிலும் 8 மண்டலங்களில் நடைபெற்ற விநாடி-வினா போட்டிகளில் தேர்வுபெற்ற தலா ஒருவர் வீதம் பங்கேற்றனர். சீனியர் பிரிவில் நெல்லை மண்டலத்தில் இருந்து கன்னியாகுமரி பிஷப் ரெமிஜியஸ் பள்ளி (சிபிஎஸ்இ) 9-ம் வகுப்பு மாணவன் மெரசெவ் ஆர்.ராயன்,திருச்சி மண்டலத்தில் இருந்து புதுக்கோட்டை மவுண்ட் சீயான் இன்டர்நேஷனல் பள்ளி 9-ம் வகுப்பு மாணவி கே.சந்த்ரினிபிரியா, மதுரை மண்டலத்தில் இருந்து பெருங்குடி செயின்ட் அனீஸ் பெண்கள் மேனிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவி கே.ஏ.குந்தினி ஆகியோரும்,

புதுச்சேரி மண்டலத்தில் இருந்து பிலாபாங்க் ஹை இன்டர்நேஷனல் பள்ளி 8-ம் வகுப்பு மாணவி கே.யோக, சென்னை மண்டலத்தில் இருந்து செம்பாக்கம் சீயான் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்ட்ரி பள்ளி 9-ம் வகுப்பு மாணவி எம்.பி.தனு, வேலூர் மண்டலத்தில் இருந்து செய்யாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 8-ம் வகுப்பு மாணவி டி.ஜூவால மாலினி, கோவை மண்டலத்தில் இருந்து தி பிஎஸ்பிபி மில்லேனியம் பள்ளி 8-ம் வகுப்பு மாணவன் யு.கே.சுஜன், சேலம் மண்டலத்தில் இருந்து கிருஷ்ணகிரி ஆசியன் கிறிஸ்டியன் பள்ளி 8-ம் வகுப்பு மாணவி எம்.ஜனனி ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த விநாடி-வினா இறுதிப்போட்டியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் பொதுமேலாளர் டி.ராஜ்குமார் தொடங்கி வைத்தார். நிகழ்வின் நாலெட்ஜ் பார்ட்னரான எக்ஸ் குவிஸ்இட்-ன் நிறுவனர் அரவிந்த் ராஜீவ், இப்போட்டியை சிறப்பான முறையில் நடத்தினார். போட்டியின் மதிப்பீட்டாளராக அவினாஷ் செயல்பட்டார். 5 வகையான பிரிவுகளில் நடைபெற்ற விநாடி-வினா போட்டிகளில் அனைத்து மாணவ-மாணவிகளும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இறுதிப் போட்டியில் ஜூனியர் பிரிவில் மதுரை மண்டலத்தில் இருந்து பங்கேற்ற சிஇஒஏ மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்ட்ரி பள்ளி மாணவி எஸ்.ஹர்ஷிதாவும், சீனியர் பிரிவில் நெல்லை மண்டலத்தில் இருந்து பங்கேற்ற கன்னியாகுமரி பிஷப் ரெமிஜியஸ் பள்ளி (சிபிஎஸ்இ) மாணவன் மெரசெவ் ஆர்.ராயனும் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு பரிசுகள் அவர்களின் வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும்.

நிறைவாக, விநாடி-வினா போட்டியில் பங்கேற்ற மாணவ- மாணவிகளும், அவர்களது பெற்றோரும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். கரோனா போன்ற காலங்களில் வீடுகளிலுள்ள குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட இப்போட்டி மிகுந்த உற்சாகத்தை அளித்ததாகக் கூறினர்.

இப்போட்டியில் பங்கேற்ற 5,242 மாணவ-மாணவிகளும் விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். அனைவருக்கும் மின்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உறுதிமொழியேற்க விரும்புபவர்கள் https://connect.hindutamil.in/NLC_pledge_CVC என்ற லிங்க்கில் சென்று உறுதிமொழியை எடுத்துக் கொள்ளலாம். உறுதிமொழி எடுக்கும் அனைவருக்கும் மின்னஞ்சல் வழியே மின்சான்றிதழ் வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x