Published : 27 Oct 2020 12:31 PM
Last Updated : 27 Oct 2020 12:31 PM

கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி: அரிசியில் ‘அ’ எழுதி கல்வியைத் தொடங்கிய குழந்தைகள்

திருநெல்வேலி டவுனில் உள்ள சரஸ்வதி கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு நடந்த வித்யா ரம்பம் நிகழ்ச்சியில், அரிசியில் தமிழின் முதல் எழுத்தான ‘அ’ எழுதி கல்வி கற்க தொடங்கிய குழந்தைகள். படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி/ நாகர்கோவில்/ தூத்துக்குடி

விஜயதசமியை முன்னிட்டு கோயில்கள் மற்றும் பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநெல்வேலி டவுனில் உள்ள சரஸ்வதி கோயிலில் காலை 8 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து குழந்தைகள் கல்வி கற்க தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

குழந்தைகள் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு, மஞ்சள் கலந்த அரிசியில் தமிழில்முதல் எழுத்தான ‘அ’ குழந்தைகளின் கைகளை பிடித்து புரோகிதர்கள் எழுத வைத்தனர். ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர்.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நாகராஜா கோயில், சரஸ்வதி கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் உட்படநூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களில் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக சமூகஇடைவெளியுடன் குழந்தைகளையும், பெற்றோரையும் கோயிலுக்குள் அனுமதித்து வித்யாரம்பம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

வள்ளியூர்

வள்ளியூர் மெர்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கொலு அமைக்கப்பட்டு, விஜயதசமி விழாநேற்று நடைபெற்றது. பள்ளியில் புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை பள்ளித் தாளாளர் ஆர்.முருகேசன், பள்ளி முதல்வர் ஆர்.ஆண்டாள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி 2-ம் கேட் அருகே எஸ்ஏவி பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி கோயிலில் சுமார் 40 குழந்தைகள் மஞ்சளைக் கொண்டு அரிசியில் அகரத்தை எழுதி ஆரம்ப கல்வியைத் தொடங்கினர். இதுபோல் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளிலும் வித்யாரம்பம் நடைபெற்றது.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் சரவணய்யர் நடுநிலைப் பள்ளியில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு தாளாளர் ச.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை ச.உஷா முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு ஏடு மற்றும் அரிசி, நெல் முதலானவற்றில் முதலெழுத்தான 'அ' எழுதக் கற்றுக்கொடுத்தனர்.

இதுபோல் திருச்செந்தூர் ராமையா பாகவதர் நினைவு செந்தில்முருகன் நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகி இரா.சுப்பிரமணியன், தலைமை ஆசிரியர் க.சுபா செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x