ஆசிரியர்களுக்கு எதிரான புதிய அரசாணைகளை ரத்து செய்க: அரசுக்குத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்

ஆசிரியர்களுக்கு எதிரான புதிய அரசாணைகளை ரத்து செய்க: அரசுக்குத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்
Updated on
1 min read

ஆசிரியர்களுக்கு எதிரான புதிய அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்துத் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் தலைவர் நா.சண்முகநாதன் கூறியதாவது:

''தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர்களும் பல ஆண்டுகளாகப் பெற்று வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வானது கடந்த மார்ச் மாதம் முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பணியில் இருந்துகொண்டே பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் அண்ணா ஆட்சிக் காலத்தில் ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி ஒரு ஆசிரியர் தனது பணிக்காலத்தில் தான் பெற்ற உயர்கல்விக்காக அதிகபட்சமாக 2 ஊக்க ஊதிய உயர்வுகளைப் பெற முடியும். இந்த ஊதிய உயர்வு மார்ச் மாதத்தில் இருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் உயர்கல்வித் தகுதி பெறுவது என்பது அவர்களிடம் பயிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குப் பயன்படக் கூடியது. ஆசிரியர்கள் கல்வி சார்ந்த அறிவை நாள்தோறும் மேம்படுத்திக் கொள்வதற்கு உதவக் கூடியது. அதை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வைத் தமிழக அரசு ரத்து செய்துள்ளது நல்லதல்ல. மேலும், ஆசிரியர்களின் பணிக்கான வயது வரம்பை 40 ஆகக் குறைத்திருப்பது ஆசிரியர் கனவோடு உள்ளோருக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

எனவே, இத்தகைய அரசாணைகளை உடனே ரத்து செய்ய வேண்டும். மேலும், ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும்''.

இவ்வாறு சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in