Last Updated : 15 Oct, 2020 07:33 PM

 

Published : 15 Oct 2020 07:33 PM
Last Updated : 15 Oct 2020 07:33 PM

ஏழை மாணவர்களுக்கு இலவச அறிவியல் பயிற்சி; பொறியியல் பட்டதாரிகளின் சேவையால் வானில் ராக்கெட் விடும் மாணவர்கள்

சேலத்தில் பொறியியல் பட்டதாரிகள் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குக் கடந்த மூன்று ஆண்டாக இலவசமாக அறிவியல், கணித செய்முறைப் பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த இளைஞர்களின் முயற்சியால் அரசுப் பள்ளி மாணவர்கள் வானில் ராக்கெட் விட்டு, பரிசுகளை வென்றுள்ளனர்.

சேலம், எருமாபாளையத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள் அரவிந்த், சண்முகராஜா, சூர்யா, அஜித்குமார், ராகுல், கதிரவன். இவர்கள் ‘விங்க்ஸ் ஆஃப் சைன்ஸ்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் சேலம், தருமபுரி மாவட்டங்களில் மலைவாழ், பழங்குடியின மற்றும் கிராமப்புற அரசுப் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த செய்முறைப் பயிற்சியை அளித்து வருகின்றனர். குறிப்பாக இணைய வசதியற்ற ஏழை, எளிய கிராமப்புற அரசுப் பள்ளியைச் சேர்ந்த 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்க்கு எளிய முறையில் அறிவியல் பாடத்திட்டங்களைக் கற்பித்து, அவர்களின் விஞ்ஞான அறிவை வளர்க்கும் முயற்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக அரசுப் பள்ளி மாணவர்கள் அறிவியல் சம்பந்தமாக நடக்கும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை வென்று வருகின்றனர். இன்று சேலம் எருமாபாளையத்தில் குடியரசு முன்னாள் தலைவர் ஏபிஜே அப்துல்கலாமின் 89-வது பிறந்த நாள் விழாவில் அரசுப் பள்ளி மாணவர்கள் 50 பேர் பங்கேற்று, வானில் தண்ணீர் ராக்கெட் விடும் இளையோர், மூத்தோர் போட்டியில் கலந்து கொண்டு 81.5 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் ராக்கெட்டை வானில் செலுத்தி அசத்தினர்.

இதுகுறித்து 'விங்க்ஸ் ஆஃப் சைன்ஸ்' நிர்வாகி அரவிந்த் கூறும்போது, ''பொறியியல் பட்டப் படிப்பு இறுதியாண்டு படிக்கும்போது, எங்கள் குழுவினர் கிராமப்புற, மலைவாழ் மாணவர்களுக்கு அறிவியல், கணிதப் பாடங்களுக்குச் செய்முறையுடன் கூடிய பயிற்சி அளிக்க ஆரம்பித்தோம். சேலம், தருமபுரி பகுதிகளில் உள்ள ஆத்தூர், எடப்பாடி கண்ணந்தேரி, தளவாய்ப்பட்டி, எட்டிக்குட்டைமேடு, பாப்பிரெட்டிப்பட்டி என நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ராக்கெட் சைன்ஸ், சிம்பிள் சைன்ஸ், ரோபோட்டிக் சைன்ஸ் மற்றும் கணிதப் பாடங்களைக் கற்பித்து வருகிறோம். நேரடி செய்முறைப் பயி்ற்சி மூலம் அறிவியல் பாடம் முழுவதையும் எளிய முறைகளைக் கையாண்டு கற்பித்து வருகிறோம்.

தண்ணீர் மூலம் ராக்கெட்டைப் பறக்க வைப்பது, பத்து வகையான முறையில் ரோபோக்கள் வடிவமைப்பது, நியூட்டன் விதிகளின் செயல்பாடு மற்றும் கணிதப் பாடங்களில் வரும் சூத்திரங்களை எளிய முறையில் மனதில் வைத்து, கணிதம் போடுவது ஆகியவற்றைக் கற்பித்து வருகிறோம். ஒவ்வொரு அரசுப் பள்ளியாக தேடித் தேடிச் சென்று கடந்த மூன்று ஆண்டுகளாக அறிவியல் பாடத்திட்ட செய்முறைப் பயிற்சி அளித்து வருகிறோம்.

இதன் மூலம் ஏழை, எளிய மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றும், பல்வேறு அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புப் போட்டிகளில் வெற்றி பெற்றும் வருகின்றனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தொடர்ந்து இலவசமாக அறிவியல் செய்முறைக் கற்பித்தல் பணியைத் தொடர்வோம்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x