

சிபிஎஸ்இ உடன் இணைந்த இன்டெல் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு தொடர்பான மெய்நிகர் வகுப்பில் அதிகபட்ச மாணவர்களைக் கலந்துகொள்ள வைத்து, உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
இது தொடர்பாக இன்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி வெளியீட்டில், ''இன்டெல் - சிபிஎஸ்இ இணைந்து செயற்கை நுண்ணறிவு தொடர்பாக மெய்நிகர் வகுப்புகளை நடத்தியது. இதில் 24 மணி நேரத்தில் 13 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்டு உலக சாதனை படைத்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து 8-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு அக்.13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இன்டெல் - சிபிஎஸ்இ இணைந்து நடத்தி வரும் இளைஞர்களுக்காக செயற்கை நுண்ணறிவு (AI For Youth) மெய்நிகர்க் கருத்தரங்கத்தின் ஒரு பகுதியாக இந்தப் பயிற்சி வழங்கப்பட்டது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்டெல் ஏபிஜே இயக்குநர் ஸ்வேதா குரானா கூறும்போது, ''செயற்கை நுண்ணறிவின் சமூக நன்மைகள் குறித்து ஆழமாகவும் பரவலாகவும் சிந்திக்க உதவும் வகையில் இந்த செயல்திட்டம் உதவும்'' என்றார்.
சிபிஎஸ்இ பயிற்சிகள் மற்றும் திறன் கல்வி இயக்குநர் பிஸ்வாஜித் சாஹா தெரிவிக்கையில், ''இந்தியாவின் டிஜிட்டல்மயமாக்கப்பட்ட பயணத்தில் வருங்காலத் தொழில்நுட்பங்களில் முக்கியமான ஒன்றாக செயற்கை நுண்ணறிவு இருக்கும்'' என்றார்.