Published : 13 Oct 2020 07:45 am

Updated : 13 Oct 2020 07:45 am

 

Published : 13 Oct 2020 07:45 AM
Last Updated : 13 Oct 2020 07:45 AM

‘இந்து தமிழ் திசை’ - ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’ நடத்தும் ‘ஆளப் பிறந்தோம்’ ஆன்லைன் வழிகாட்டு நிகழ்ச்சி; பயிற்சிகளால் மட்டுமே மாணவர்கள் வெற்றியைப் பெற முடியும்: தமிழக ரயில்வே போலீஸ் இயக்குநர் டாக்டர் சைலேந்திர பாபு ஐபிஎஸ் அறிவுறுத்தல்

aala-pirandhom

சென்னை

ஒரே நாளில் எதையும் சாதிக்க முடியாது, பயிற்சியால் மட்டுமே மாணவர்கள் வெற்றியைப் பெற முடியும் என சைலேந்திர பாபு ஐபிஎஸ் தெரிவித்தார்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், சங்கர்ஐஏஎஸ் அகாடமி உடன் இணைந்து நடத்தும் ‘ஆளப் பிறந்தோம்’ ஆன்லைன் வழிகாட்டு நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. காணொலி காட்சி மூலம்நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக ரயில்வே போலீஸ் இயக்குநர் டாக்டர் சி.சைலேந்திர பாபு ஐபிஎஸ் கலந்துகொண்டு பேசியதாவது:


நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் உள்ள உயர் பதவிக்கு யுபிஎஸ்சிதேர்வு நடைபெறுகிறது. இந்த தகவல்பள்ளி மாணவர்களுக்கு தெரிவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால், பள்ளிகளில் இருந்தே கனவோடு இருக்கும் மாணவர்களுக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.

போட்டித் தேர்வு என்றாலே, யார் தங்களை சிறப்பாக தயார்படுத்திக் கொள்கிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற முடியும். உதாரணமாக 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உசேன் போல்ட் சாதனை படைக்கிறார் என்றால்,அவர் பல ஆயிரம் முறை ஓடி பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

அதேநேரத்தில் பொறியியல் படித்துமாணவி பிரித்திங்கா ராணி என்பவர் முதல்முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இருக்கிறார். ஏனென்றால், அவர் பள்ளி வகுப்பில் இருந்தே ஒழுங்காகப் படித்துள்ளார். அதேபோல், சராசரி மாணவர்களாலும் சிவில் தேர்வில் நிச்சயம் வெற்றிபெற முடியும்.

மதுரையைச் சேர்ந்த எனது மாணவியான பூர்ண சுந்தரிக்குப் பார்வைத்திறன் கிடையாது. ஆனால் அவர் பெரிய அளவில் முயற்சி செய்து தற்போது சிவில் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

முதலில் சிவில் பணிகளுக்கு ஏன்இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். இந்த தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால், மிக குறைந்த வயதில் உயர் பதவிக்கு சென்றுவிட முடியும். இதை பதவி என்பதை விட பொறுப்பு என்றே சொல்லவேண்டும்.

யுபிஎஸ்சி தேர்வை சுலபம் என்று நினைத்தால் சுலபம், கடினம் என்று நினைத்தால் கடினம். ஆனால் இது மிகவும் சாதாரண தேர்வுதான். தேர்வுக்குதயாராகும்போது ‘இந்து’ செய்தித்தாளில் வரும் கட்டுரைகள் குறித்து சிறிது ஆராய்ச்சி செய்து கட்டுரை எழுத பழகிக் கொள்ள வேண்டும்.

ஆளப் பிறந்தவன் தனது தகுதியைவளர்த்துக் கொள்ளாமல், ஆள முடியாது. தேர்வுக்குத் தயாராகும் நபர்கள் முதலில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், புள்ளியியல், சிந்தனை, பொது அறிவு, பொருளாதாரம் போன்றபாடங்களை நன்கு படிக்க வேண்டும்.

10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவரின் அறிவுத் திறன் எவ்வளவு இருக்கிறது என்ற சோதனைதான் முதல் கட்டத்தேர்வாகும். இந்த ஆண்டு தேர்வில் அறிவியல் பாடத்தில் இருந்து13 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அறிவியல் தொழில்நுட்பம், பொருளாதாரம், கணிதம் உள்ளிட்ட துறைகளில் உள்ள வளர்ச்சியைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.

அதேபோல் கலாச்சாரம், வரலாறு போன்ற பாடங்களைத் தேடித் தேடிபடிக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்து தெளிவானபார்வை வேண்டும். இவை அனைத்துமே நமது பள்ளி பாடத்திலேயே உள்ளன. பள்ளி மாணவர்கள் பாடங்களைப்புரிந்து, ஆர்வத்தோடு படித்தாலே போதும். பள்ளியில் ஒவ்வொரு பாடத்திலும் நல்ல மதிப்பெண் எடுத்தாலே, சிவில் சர்வீஸ் தேர்வுக்கு நீங்கள் தயாராகிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும்.

யுபிஎஸ்சி தேர்வு எழுத ஆர்வமுள்ளமாணவர்கள், பள்ளி பாடத்தையும், ஆங்கில, தமிழ் செய்தித்தாள்களையும் படிக்க வேண்டும். 80 சதவீத கேள்விகள் பத்திரிகைகளில் இருந்துதான் கேட்கப்படுகிறது. எனவே, தினமும் ஒரு மணிநேரமாவது செய்தித்தாள்களைப் படிக்க வேண்டும். தாய்மொழியில்தேர்ச்சி பெறவில்லை என்றால் நீங்கள் ஐஏஎஸ் ஆகவே முடியாது. அதேபோல், ஆங்கில திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் அரை பக்கமாவது கட்டுரை எழுதி பழக வேண்டும். ஒரே நாளில் எதையும் சாதிக்க முடியாது. பயிற்சியால் மட்டுமே வெற்றிகளைப் பெறமுடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மிசோரம் மாநிலத்தின் சாய்ஹா மாவட்ட துணை ஆணையர் கேசவன் ஐஏஎஸ்: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போன்ற மேலாண்மை பணிக்கான வாய்ப்பு தற்போது அனைவருக்கும் கிடைத்திருப்பது அரசியலமைப்பு செய்த புரட்சி என்றே கூறலாம். தேர்வுக்குத் தயாராகும் நபர்கள் பணம் இருந்தால் அரசு வேலை கிடைக்கும், சராசரி மாணவர்களால் வெற்றி பெறமுடியாது, தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்குத் தேர்வு கடினமாக இருக்கும், பின்புலம் இருக்க வேண்டும், கிராமப்புற மாணவர்களால் முடியாது போன்ற மனதளவு தடைகளை முதலில் உடைக்க வேண்டும்.

அதேபோல், ‘இந்து’ செய்தித்தாள் வாசிப்பு மிகவும் அவசியமாகும். விளையாட்டு, சினிமா செய்திகளை தவிர்த்துஆசிரியர் பக்க செய்திகளுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தேர்வுக்கான பாடத்திட்டத்தை நன்கு அறிந்து, என்சிஆர்டி மற்றும் மாநில பாடத்திட்ட புத்தகத்தை முழுமையாகப் படிக்க வேண்டும். எழுத்து திறனை வளர்த்துக்கொண்டு குறைந்தது ஓர் ஆண்டாவது முழு கவனத்தோடு, கவனச் சிதறல் இல்லாமல் படித்தால் வெற்றி எனும் இலக்கை அடையலாம்.

சங்கர் ஐஏஎஸ் அகடாமியின் சிறப்பு ஆசிரியர் சக்திய கிருஷ்ணன் ஐஏஎஸ்: ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேர் யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பித்து, அதில் 5 லட்சம் பேர் மட்டுமே முதல் நிலை தேர்வை எழுதுகின்றனர். அதில், 15 ஆயிரம் பேர் மட்டுமே மெயின் தேர்வு எழுதி, 2,500 பேர் மட்டுமே நேர்முகத் தேர்வுக்குத் தகுதியாகிறார்கள்.

முதல்நிலைத் தேர்வானது, பொது அறிவு மற்றும் ஆப்டிடியுட் முறையில் கேள்விகள் இருக்கும். அடுத்ததாக மெயினில் 9 தாள்கள் உள்ளன. இதில் தேர்ச்சி பெற வாசிப்புத் திறன் மற்றும் கட்டுரை எழுதும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்தபடியாக, நேர்முகத் தேர்வு மிகவும் எளிமையானதாகும். ‘இந்து’ செய்தித்தாளைப் படிக்காமல் ஐஏஎஸ் ஆன ஒரு அதிகாரியைக்கூட பார்க்க முடியாது. எனவே செய்தித்தாள் வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும். ஒருநாளில் குறைந்தது 8 மணி நேரமானது தேர்வுக்குத் தயாராக வேண்டும்.

இவ்வாறு நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் பேசினர்.

இதைத்தொடர்ந்து ஐஏஎஸ் தேர்வு தொடர்பான மாணவ-மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் சீனியர் ஃபேக்கல்டி சந்துரு விளக்கமாக பதில் அளித்தார்.

இந்நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்வை தவற விட்டவர்கள் https://bit.ly/30VpxR9 என்ற யுடியூப் லிங்க்கில் பார்க்கலாம்.


‘இந்து தமிழ் திசை’சங்கர் ஐஏஎஸ் அகாடமிஆளப் பிறந்தோம்ஆன்லைன் வழிகாட்டு நிகழ்ச்சிதமிழக ரயில்வே போலீஸ் இயக்குநர்சைலேந்திர பாபு ஐபிஎஸ்Aala pirandhom

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x