

பகுதி நேர பி.இ., பிடெக். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (அக்.12) வெளியிடப்பட்டது.
தமிழகத் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில், மாநிலத்தில் செயல்பட்டு வரும் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி (சிஐடி) கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி, மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரி ஆகிய 9 கல்லூரிகளில் பகுதிநேர பிஇ., பிடெக். படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்படிப்புகளில் 1,465 இடங்கள் உள்ளன.
இந்தப் படிப்புகளுக்கான மாநில அளவிலான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வை கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி பகுதிநேர பிஇ., பிடெக். படிப்புகளில் 2020-21 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இன்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதுகுறித்துப் பகுதிநேர பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை செயலர் வி.செல்லதுரை கூறும்போது, ''பகுதி நேர பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு www.ptbe-tnea.com என்ற என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. 1,201 பேர் விண்ணப்பித்தனர். அதில் 520 தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. 126 விண்ணப்பங்கள் தகுதி பெறவில்லை. 179 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இன்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. நாளை மறுநாள் (அக். 14) முதல் 16-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்'' என்றார்.
தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றோர் விவரம்:
சிவில் இன்ஜினீயரிங் படிப்பில் கோவையைச் சேர்ந்த ஏ.செந்தில்குமார், என்.ஜபீன், விருதுநகரைச் சேர்ந்த கே.பிச்சைராஜ் ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.
மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பில் கோவையைச் சேர்ந்த பி.முத்துகுமார், பி.அருள்பிரகாசம், ஜி.கண்ணன் ஆகியோரும், எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படிப்பில் கோவையைச் சேர்ந்த கே.ரேவதி, எஸ்.மீனாட்சிசுந்தரம், இ.சரவணன் ஆகியோரும், டெக்ஸ்டைல் இன்ஜினீயரிங் படிப்பில் கோவையைச் சேர்ந்த ஆர்.சுரேஷ், எம்.நந்தகுமார், என்.மணிகண்டன் ஆகியோரும் முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.