

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வை புதுச்சேரி ஜவஹர் நவோதயா பள்ளி மாணவர்கள் 29 பேர் எழுதினர். இதில் 26 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மத்திய அரசின் கல்வித்துறையின் கீழ் புதுச்சேரி பெரிய காலாப்பட்டில் உள்ள ஜவஹர் நவோதயா பள்ளியானது உறைவிடப் பள்ளியாக இயங்கி வருகிறது. நாடு முழுவதுமுள்ள 593 நவோதயா பள்ளிகளில் இதுவும் ஒன்று. ஜேஇஇ தேர்வில் இப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இதுபற்றிப் பள்ளி முதல்வர் பொன்.ராமச்சந்திரன் கூறியதாவது:
"கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஜேஇஇ முதன்மைத் தேர்வில் இப்பள்ளியைச் சேர்ந்த 31 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். தேர்வு எழுதிய மாணவர்களில் பெரும்பாலானோர் கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இதைத்தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் இப்பள்ளியைச் சேர்ந்த 29 பேர் தேர்வு எழுதினர். அதில் 26 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதில் அபர்மயா கிரீஷ் என்ற மாணவர் அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 1,562-வது இடம் பிடித்துள்ளார்.
இப்பட்டியலில் மொத்தம் 1.51 லட்சம் பேர் உள்ளனர். தேர்ச்சி பெற்ற 26 பேரும் ஐஐடி, என்ஐஐடி கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயிலத் தகுதி பெறுவார்கள். தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு (வித்யாலயா நிர்வாகக் குழுத் தலைவர்) பாராட்டுத் தெரிவித்தார்."
இவ்வாறு பொன்.ராமச்சந்திரன் குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து தேர்ச்சி அடைந்த 26 மாணவர்களையும் பள்ளி முதல்வர், துணை முதல்வர் சுந்தரராஜன், நவோதயா பள்ளி ஒருங்கிணைப்பாளர் வேணுகோபால், ஆசிரியர்கள், ஆசிரியைகள் ஆகியோர் பாராட்டினர்.