

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இணையவழியில் நடைபெற்ற வரி தொடர்பான 16-வது நானி பல்கிவாலா மாதிரி நீதிமன்றப் போட்டியில் திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் வெற்றி பெற்றது.
இணையவழி மாதிரி நீதிமன்றப்போட்டி அக்.2-ம் தேதி தொடங்கியது. இதில், தேசிய அளவிலான சட்டவியல் கல்வி நிறுவனங்களிலிருந்து 16 அணிகள் கலந்துகொண்டன.
இப்போட்டிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்தலைமையில் ஓய்வு பெற்ற நீதிபதிஆர்.வி.ஈஸ்வர், மூத்த வழக்கறிஞர்கள் என்.வெங்கடராமன், விக்ரம்ஜித் பானர்ஜி, அரவிந்த் பாண்டியன் ஆகிய 5 பேர் கொண்ட அமர்வு நடுவர்களாக இருந்தது.
இதில், திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் வெற்றி பெற்றது. இரண்டாவது இடத்தை பஞ்சாப் ராஜீவ் காந்தி தேசிய சட்டப் பல்கலைக்கழகம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிக்கு ரூ.1 லட்சமும், இரண்டாமிடம் பெற்ற அணிக்கு ரூ.50 ஆயிரமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற 16 அணிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு நானி பல்கிவாலா குறித்த நூல் வழங்கப்பட்டது.
மேலும், புனே சிம்பியாசிஸ் சட்டவியல் பள்ளியைச் சேர்ந்த அஸ்வனி நாக் என்பவருக்குச் சிறந்த பேச்சாளர் விருதும், ஸ்ரீதத்தா சரணுக்கு சிறந்த ஆய்வாளர் விருதும், தில்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்துக்கு சிறந்த நினைவு விருதும் வழங்கப்பட்டது.
வழக்கறிஞர்கள் லஷ்மிகுமரன், ஸ்ரீதரன் வடிவமைத்த இந்த மாதிரி நீதிமன்றப் போட்டியை சாஸ்த்ரா மாணவர்கள் சாய் சசாங்க், ஸ்ரேயா கோபால் ஒருங்கிணைத்து நடத்தினர். இணையவழியில் நடைபெற்ற இப்போட்டிகளில் 50 நீதிபதிகள், 200 மாணவர்கள் பங்கேற்றனர். இதை இணையவழியில் சுமார் 1,000 பேர் பார்த்தனர்.