

ஒடிசாவைச் சேர்ந்த 104 வயது முதியவர் தன்னுடைய கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஒரு பைசா கூடக் கட்டணம் வாங்காமல் பாடங்கள் கற்பித்து வருகிறார்.
ஒடிசாவின் ஜெய்ப்பூர் மாவட்டம், பர்தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தா பிரஸ்தி. தன்னுடைய இளமைக் காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர், நூற்றாண்டைக் கடந்த பிறகும் ஆர்வத்துடன் கற்பித்து வருகிறார். தன்னுடைய 75 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவத்தைப் பணமாக்க நினைக்காமல், தன் கிராமக் குழந்தைகளைக் கற்றவர்கள் ஆக்க நினைத்துச் செயல்பட்டு அருகிறார்.
கிராமத்தில் உள்ள பழமையான மரத்தின் அடியில் அமர்ந்து நந்தா கற்பிக்கிறார். மழை, காற்று, வெயில் என எந்தவொரு பருவச் சூழலையும் அவர் பொருட்படுத்துவதில்லை. இதுகுறித்து அரசிடம் தெரிவித்தும், இதுவரை எந்தக் கட்டமைப்பும் செய்து தரப்படவில்லை என்கின்றனர் கிராம மக்கள்.
இதுகுறித்து முதியவர் நந்தா பிரஸ்தி கூறும்போது, ''ஓய்வு நேரத்தில் விவசாய நிலங்களில் நான் வேலை செய்யும்போது எங்கள் கிராம மக்களில் ஏராளமானோர் படிக்காதவர்களாக இருந்ததைக் கண்டேன். கையெழுத்துக் கூடப் போடத் தெரியாமல் கைரேகை வைத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்குக் கையெழுத்து போடக் கற்றுக் கொடுத்தபோது, எழுத்துகளைப் படிப்பதில் ஆர்வம் காட்டினர்.
அப்போது தொடங்கிய கற்பித்தல் பணி, இப்போது வரை இடைவிடாமல் நடைபெற்று வருகிறது. தற்போது கொள்ளுப் பேரக் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறேன்'' என்றார்.
இதுகுறித்துக் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் கூறும்போது, ''நந்தா கடந்த 75 ஆண்டுகளாகக் கற்பித்து வருகிறார். ஆசிரியப் பணியையே அறப்பணியாக நினைத்துச் செயல்படுபவர், அரசிடம் இருந்து தனக்கெனத் தனிப்பட்ட உதவிகளைப் பெற மறுத்துவிட்டார். தற்போது கிராம நிர்வாகம் சார்பில், கற்பித்தலுக்கான கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளோம்'' என்று தெரிவித்தார்.