

நீட் தேர்வுக்கான விடைக் குறிப்புகள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதில் ஆட்சேபனைக் கருத்துகளைத் தெரிவிக்க இன்றே கடைசி நாள் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு கரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் கடந்த செப்.13-ம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 14.37 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில் நீட் தேர்வுக்கான விடைக் குறிப்புகள் (கீ ஆன்சர்) கடந்த 26-ம் தேதி வெளியாகின.
நீட் தேர்வு விடைக்குறிப்பு விவரங்களை மாணவர்கள் https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து என்டிஏ வெளியிட்டுள்ள அறிவிப்பு:
''ஆட்சேபனைக் கருத்துகளைத் தெரிவிக்க மாணவர்களுக்குப் பிரத்யேக வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, ntaneet.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தங்களின் ஐடியில் apply for key challenge என்ற தேர்வைத் தேர்ந்தெடுத்து ஆட்சேபனையைத் தெரிவிக்க வேண்டும்.
இதற்குக் கட்டணமாக ஒரு தொகையைச் செலுத்த வேண்டும். மாணவர்கள் தெரிவித்த ஆட்சேபனை சரியாக இருந்தால், செலுத்திய கட்டணம் திருப்பிச் செலுத்தப்படும். கூடுதல் விவரங்களை ntaneet.nic.in, www.nta.ac.in ஆகிய இணையதளங்களில் அறியலாம்''.
இவ்வாறு தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.