

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் அமைந்துள்ளது துமார்த்தார் கிராமம். பழங்குடி சமூகத்தினர் அதிகளவில் வசித்து வரும் இந்த கிராமத்தில், கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக அரசுப் பள்ளி திறக்கப்படவில்லை.
பள்ளி திறக்கப்படாத காரணத்தால், அங்குள்ள மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் சேர்ந்து வேலைக்கு செல்ல தொடங்கி விட்டனர். மேலும், பாடங்கள் படிப்பதையும் அவர்கள் நிறுத்திவிட்டதாக தெரிகிறது. இந்த நிலை தொடரும்பட்சத்தில், அவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வருவது சிரமம் என்பதை உணர்ந்ததலைமை ஆசிரியர் சபன் பத்ரலேக், இதற்கு தீர்வு காண எண்ணினார்.
அதன்படி, அந்த மாணவர்களின் வீடுகளில் முன்புறம் உள்ள சுவர்களில் கருப்பு வண்ணம் பூசி, பள்ளிக் கரும்பலகைகளை போல மாற்றினார். பின்னர், தினமும் காலையில் அந்தந்த வீட்டுக் குழுந்தைகளை சீருடையுடன் அங்கு அமரச் செய்து பாடங்களை சொல்லித் தர ஏற்பாடுகள் செய்தார். 290 மாணவர்களை 50 பேர்கள் என்ற வீதம் பிரித்து, ஷிப்ட் முறையில் வகுப்புகள் நடைபெறுவதால், சமூக இடைவெளி நன்றாக பேணப்பட்டு வருவதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது மாணவர்கள் பாடங்களை ஒழுங்காக படித்து வருவதாக பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.