

காரைக்காலைச் சேர்ந்த இரட்டையர் சிறு வயதிலேயே கராத்தேவில் தொடர்ந்து சாதனைகள் புரிந்து வருகின்றனர்.
காரைக்காலைச் சேர்ந்த முருகானந்தம் - பிரியா தம்பதியரின் பிள்ளைகள் கே.ஸ்ரீவிசாகன், கே.ஸ்ரீஹரிணி. காரைக்காலில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் இரட்டையர்களான இவர்கள் காரைக்காலில் செயல்படும் தனியார் அகாடமியில் கராத்தே பயிற்சி பெற்று வருகின்றனர். 3 வயது முதல் கராத்தே, சிலம்பம், யோகா, கிக் பாக்ஸிங், குபுடோ, டேக்வோண்டோ உள்ளிட்ட பல்வேறு தற்காப்புக் கலைகளைப் பயின்று வருகின்றனர். இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போட்டிகளிலும், வெளிநாடுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் கலந்துகொண்டு தங்கம் உள்ளிட்ட பல பதக்கங்களைப் பெற்று காரைக்காலுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்கள் படிக்கும் பள்ளி நிர்வாகம் இவர்களின் சாதனைகளைத் தொகுத்து உருவாக்கிய புத்தகத்தைக் கடந்த ஆண்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டார். ராமநாதபுரத்தில் உள்ள 'வில் மெடல் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டர்ஸ் அண்டு ரிசர்ச் பவுண்டேஷன்' என்ற அமைப்பு, உலகிலேயே 6 முதல் 9 வயதுக்குட்பட்ட சகோதர, சகோதரியான இரட்டையர் இந்த அளவிலான சாதனைகள் படைத்திருப்பதை அங்கீகரித்து விருது வழங்கியது.
கரோனா பொது முடக்கம் முழுமையான அளவில் அமலில் இருந்த சமயத்தில், இவர்கள் வீடியோ மூலம் தற்காப்புக் கலைகளை கற்றுக் கொடுத்து வந்தனர்.
இந்த எண்ணம் உருவானது குறித்து ஸ்ரீ விசாகன் கூறுகையில், "நாங்கள் 3 வயதிலிருந்தே தற்காப்புக் கலைகளை மிகுந்த ஆர்வத்துடன் கற்று வருகிறோம். மாஸ்டர் வி.ஆர்.எஸ்.குமாரின் சிறப்பான பயிற்சியாலும், தொடர் முயற்சியினாலும் 9 வயதுக்குள்ளேயே கராத்தே கலையில் இரண்டு 'பிளாக் பெல்ட்' வென்ற இரட்டையர் என்ற உலக சாதனையை எட்டியிருக்கிறோம். சர்வதேச அளவில் பல நாடுகளுக்குச் சென்று போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளோம். கராத்தே, குங்பூ, சிலம்பம், குத்துச்சண்டை, வாள், சுருள் வாள் எனப் பல்வேறு தற்காப்பு பயிற்சிகளைப் பயின்றோம்.
கரோனா பொது முடக்கத்தால் பலரும் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்த சூழலில், அனைவரும் பெரிதும் இணைய உலகில் மூழ்கியிருந்தனர். இணையத்தில் பல்வேறு வீடியோக்களைப் பார்த்து பல விஷயங்களைத் தெரிந்து கொள்கின்றனர். அந்த வகையில், தற்காப்புக் கலைகள் குறித்து அறிந்துகொள்ள ஆர்வப்படும் சிறார்களுக்கு உதவும் வகையில் தற்காப்புப் பயிற்சி வீடியோக்களைப் பதிவேற்றம் செய்யலாம் என்ற எண்ணம் உருவானது.
நானும், எனது சகோதரியும் கராத்தே, சிலம்பம், குங்பூ போன்ற பயிற்சிகளைப் புதுமையான வகையில் மேற்கொள்வோம். அவற்றை எங்கள் தந்தை முருகானந்தம் வீடியோவாகப் பதிவு செய்தார். அந்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்த பின்னர் அவற்றைப் பலரும் பார்த்து தற்காப்புக் கலைகள் குறித்து அறிந்து கொண்டதுடன், பயிற்சி பெறவும் செய்தனர்" என்றார்.
தந்தை முருகானந்தம் கூறுகையில், "சிறுவயது முதலே இருவரும் தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும், கல்வியோடு இவற்றிலும் சாதனை புரிய வேண்டும் என்ற லட்சியத்துடன் பயணித்து வருகின்றனர். அதற்காக கடின உழைப்பும் செலுத்தி வருகின்றனர்.
2017-ம் ஆண்டு 6 வயதில் முதல் நிலை 'பிளாக் பெல்ட்' பெற்றனர். அதற்கு அடுத்த ஆண்டு இரண்டாம் நிலை 'பிளாக் பெல்ட்' பெற்றனர். தற்போது கல்வியில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிவிட்டதால் அதில் கவனம் செலுத்தி வருகின்றனர். விளையாட்டுத் துறையில் அவர்களைப் பெரிய சாதனையாளர்களாக உருவாக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அதேசமயம் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற மகனின் லட்சியமும், மருத்துவராக வேண்டும் என்ற மகளின் லட்சியமும் நிறைவேற உறுதுணையாக இருப்பேன்" என்றார்.
அண்மையில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற டேக்வோண்டோ குறித்த தேர்வுகளில் இரட்டையர்கள் கே. ஸ்ரீவிசாகன், கே. ஸ்ரீஹரிணி பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். 200-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்று வீடு முழுவதும் பரிசுக் கோப்பைகளால் நிறைத்து வைத்துள்ளனர். 'வொண்டர் சாதனையாளர்' புத்தகத்திலும் இவர்கள் இடம் பிடித்துள்ளனர். www.karatetwins.com என்ற தளத்திலும், யூடியூப் பக்கத்திலும் தங்கள் வீடியோக்களைப் பதிவேற்றம் செய்துள்ளனர்.