

பெரம்பலூர் அருகே அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்கள் 16 பேருக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்க வசதியாக ஆசிரியை ஒருவர் தனது சொந்தப் பணத்தில் ஸ்மார்ட் போன்களை வாங்கிக் கொடுத்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், அப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியையும், கணித பட்டதாரி ஆசிரியையுமான பைரவி, 10-ம் வகுப்பு பயிலும் 16 மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்க வசதியாக தன்னுடைய சொந்தப் பணம் ரூ.1 லட்சம் செலவில் ஸ்மார்ட் போன்களை வாங்கிக் கொடுத்து அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இதுகுறித்து ஆசிரியை பைரவி கூறியதாவது: பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பலர் தொடர்ச்சியாக பங்கேற்கவில்லை. அவர்களிடம் விசாரித்தபோது ஸ்மார்ட் போன் இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் கல்வி கற்க ஏழ்மை ஒரு காரணமாக இருக்கக் கூடாது என்பதால், எனது சொந்த செலவில் 16 பேருக்கு ரூ.1 லட்சம் செலவில் ஸ்மார்ட் போன்களை வாங்கிக் கொடுத்துள்ளேன்.
பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் வரை அவர்களது ஸ்மார்ட் போன்களுக்கு ரீசார்ஜ் செய்து தரவும் முடிவு செய்துள்ளேன். இனிமேல் ஸ்மார்ட் போன் தேவைப்படும் மாணவர்களுக்கு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் வாங்கிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.