Published : 06 Sep 2020 11:37 AM
Last Updated : 06 Sep 2020 11:37 AM

கரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் டிஜிட்டல் முறைக்கு மாறிய ஆசிரியர் தின விழா: வீட்டிலிருந்தவாறு நடனமாடி வாழ்த்துக்கூறிய மாணவிகள்

கரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி பள்ளி மாணவிகள் நேற்று ஆன்லைன் மூலம் ஆசிரியர் தின விழாவை உற்சாகமாக கொண்டாடினர். தங்களது வீடுகளில் இருந்தவாறே பாட்டுப்பாடி, நடனமாடி ஆசிரியைகளுக்கு வாழ்த்து கூறினர்.

ஆண்டு தோறும் செப்டம்பர் 5-ம் தேதி பள்ளிகளில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்படும். மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடத்தி ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பர். ஆனால், இந்த ஆண்டு கரோனாஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். பெரும்பாலான பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் ஆசிரியர் தின விழாவை இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் மாணவிகளும், ஆசிரியைகளும் பங்கேற்கும் வகையில் கொண்டாட தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

1 முதல் 5, 6 முதல் 8, 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு என தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டு அந்தந்த வகுப்புகளில் பயிலும் மாணவிகளும், ஆசிரியைகளும் ஆன்லைனில் இணைந்து ஆசிரியர்தின விழாவை கொண்டாடினர். மாணவிகள் வீடுகளில் இருந்தவாறே அவர்களது விருப்பப்படி வாழ்த்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி மாணவிகள் கவிதை,பாடல், நடனம், வாழ்த்து அட்டை எனப் பல விதங்களில் வாழ்த்துகளை தெரிவித்தனர். காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை கொண்டாட்டம் தொடர்ந்தது.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை எம்.எஸ்.சாந்தினி கவுசல் கூறும்போது, ‘‘மாணவிகளுக்கு தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதால், ஆசிரியர் தின விழாவை ஆன்லைன் மூலமே கொண்டாட முடிவு செய்தோம்.

மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டு வீடுகளில் இருந்தவாறு கலைநிகழ்ச்சிகளை நடத்தி அசத்தினர். பள்ளி மேடையில் நடந்தது போலவே டிஜிட்டல்விழாவும் இருந்தது. இதனால் மாணவிகள் மட்டுமின்றி ஆசிரியைகளும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். எங்கள் பள்ளியில்3500 மாணவிகள் படிக்கும் நிலையில் 1500 மாணவிகள் மற்றும் 130 ஆசிரியைகள் விழாவில் பங்கேற்றனர். மாணவி களுக்கு இந்த விழா நிச்சயம் உற்சாகத்தை தந்திருக்கும்’’ என்றார்.

இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மேலும் சில தனியார் பள்ளிகளிலும் நேற்று ஆசிரியர் தின விழா ஆன்லைன் மூலம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x