

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் 47 ஆசிரியர்களுக்குத் தேசிய நல்லாசிரியர் விருதை காணொலி மூலம் குடியரசுத் தலைவர் இன்று வழங்கினார்.
ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு இந்நாளில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 47 ஆசிரியர்களை மத்திய கல்வி அமைச்சகம் தேர்வு செய்தது. கரோனா பரவல் காரணமாக, விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கும் கலந்துகொண்டார். இதில் விருது பெற்ற ஆசிரியர்கள் குறித்த செயல்பாடுகள் காணொலிகளாகத் திரையிடப்பட்டன.
தமிழகத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டம் மாவட்டம், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலீப் மற்றும் சென்னை, அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சரஸ்வதி ஆகிய இருவருக்கும் தனித்தனியே விருதுகள் வழங்கப்பட்டன.