

தனியார் பள்ளிகளுக்கு இணை யாக, ஆன்லைன் வகுப்பில் அம்மைய நாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி சிறப் பாகச் செயல்படுவதை பெற்றோர் பாராட்டினர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகேயுள்ளது அம்மைய நாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்திலேயே அதிக மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் பள்ளியாக உள்ளது. ஆங்கில வழிக் கல்வியும் தொடங்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கியவுடன் முதலாம் வகுப்பில் அதிகம் பேர் சேர்ந்தனர்.
ஆசிரியர்கள் ஒத்துழைப்பு
கரோனா ஊரடங்கால் தனியார் பள்ளிகள் ஆன்லைனில் வகுப்புகளை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆன்லைன் வகுப்புகளை நடத்த அம்மைய நாயக்கனூர் அரசு தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர்தர் முடிவு செய்தார்.
இவருக்கு அனைத்து ஆசிரியர் களும் ஒத்துழைப்பு அளித்தனர். மாணவர்களின் பெற்றோர்களின் அலைபேசி எண்களைச் சேகரித்து ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு வாட்ஸ் ஆப் குரூப் உருவாக்கி பாடங்களை நடத்தி வருகின்றனர்.
மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கதைகள் சொல்லியும், ஆடிப்பாடியும் வீடியோ வகுப்புகள் மூலம் குழந்தைகளை உற்சாகப்படுத்துகின்றனர்.
பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களின் உறவினர்கள் ஒத்துழைப்புடன் அம்மையநாயக்கனூர் அரசு தொடக்கப்பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆன்லைன் வகுப்பில் சிறப்பாக பாடங்களை நடத்தி வருவதை பெற்றோர் பாராட்டுகின்றனர்.