Published : 21 Aug 2020 04:27 PM
Last Updated : 21 Aug 2020 04:27 PM

இந்திய மருத்துவ மாணவர்களுக்கு இணைய வழியில் பாடங்கள்: ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு

முதலாம் ஆண்டு இந்திய மருத்துவ மாணவர்களுக்கு இணைய வழியில் பாடங்கள் நடத்தப்படும் என்று ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன. இத்தகவலை தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யப் பல்கலைக்கழங்களில் நடப்புக் கல்வியாண்டில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புக்கு சேரவிருக்கும் இந்திய மருத்துவ மாணவர்களுக்கு, இணைய வழியில் பாடங்களைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் வகுப்புகள் வரும் செப்டம்பர் / அக்டோபரில் தொடங்கி, நடப்புக் கல்வியாண்டு முழுவதும் நடைபெறும். கோவிட் 19 தொற்று காரணமாக, சர்வதேச விமானப் பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் இந்த முடிவை எடுத்துள்ளன.

ரஷ்யப் பல்கலைக்கழங்களின் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், இந்திய அரசு நிர்ணயித்துள்ள விதிகளின்படி பிளஸ் 2 பாடங்களில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். சமூக நிலையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த (OBC) மாணவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பிற பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் எனில் குறைந்தது 40 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் மற்றும் மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையின் முதல்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளன. இந்திய மாணவர்கள் உள்நாட்டிலோ, வெளிநாடுகளிலோ மருத்துவக் கல்வி பயில விரும்பினால், அதற்கு நீட் தேர்வில் வெற்றி பெறுவது தற்போது கட்டாயமாகும். ஆனாலும், ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் தற்போது நடைபெறும் மாணவ சேர்க்கையின்போதே அதற்கான சான்றிதழைத் தர வேண்டும் என்ற கட்டாயமில்லை. தேர்வு முடிந்து மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு அதாவது செப்டம்பர் மாத இறுதியில் தந்தால்போதும்.

இந்தியாவின் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்புக்கு இணையாக, ரஷ்ய மருத்துவப் பல்கலைக்கழங்கள் எம்.டி. (M.D) என்ற பெயரில் இளநிலை மருத்துவப் பட்டங்களை வழங்குகின்றன. இதை ஆங்கில மொழியில் கற்பதானால் 6 ஆண்டுகளும், ரஷ்ய மொழியில் கற்பதானால் 7 ஆண்டுகளும் (இதில் ஓராண்டு ரஷ்ய மொழி கற்பித்தல் இடம்பெறும்) படிக்க வேண்டியிருக்கும். உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்துடன், இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரமும் பெற்ற சுமார் 100 அரசு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் தற்போது ரஷ்யாவில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x