

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் எஸ்.கவுரியை பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான எஸ்.பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். பேராசிரியர் கவுரி 3 ஆண்டுகள் அந்த பதவியில் இருப்பார். தற்போது அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கி வரும் கல்வி பல்லூடக ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகவும், அண்ணா பல்கலைக்கழக உற்பத்தி பொறியியல் துறையின் வருகைப் பேராசிரியராகவும் பணியாற்றி வரும் கவுரி, பேராசிரியர் பணியில் 37 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். 5 நூல்கள், 94 ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியுள்ளார். சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக பதிவாளர், உற்பத்தி பொறியியல் துறை தலைவர், அண்ணா பல்கலைக்கழக ஊடக அறிவியல் துறை தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றியிருக்கிறார்.
மீன்வள பல்கலை
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் ஜி.சுகுமாரை ஆளுநர் நியமித்துள்ளார். இவர் 3 ஆண்டுகள் அந்த பதவியில் இருப்பார். பேராசிரியர் பணியில் 33 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த சுகுமார், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் டீன், அக்கல்லூரியின் மீன்பதப்படுத்தல் துறையின் தலைவர், நாகப்பட்டினம் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் மீன்வளத் துறை டீன் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றியவர். 24 ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியிருக்கிறார். சிறந்த நூலாசிரியர் விருது, சிறந்த விஞ்ஞானி விருது, நல்லாசிரியர் விருது, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்) சீனியர் மற்றும் ஜுனியர் ஃபெல்லோஷிப் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.