Published : 18 Aug 2020 08:22 AM
Last Updated : 18 Aug 2020 08:22 AM

அரசுப் பணி, தனியார் துறை, சுயதொழிலில் ஜொலிக்கலாம்; ஃபேஷன் டிசைன் படித்தவர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள்: ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சியில் நிபுணர்கள் தகவல்

சென்னை

ஃபேஷன் டிசைன் படித்தவர்களுக்கு அரசுப் பணி,தனியார் துறை, சுயதொழில்என பல்வேறு விதமான வேலைவாய்ப்புகள் உள்ளன. காஸ்ட்யூம் டிசைனர், கிராஃபிக் டிசைனர், ஃபேஷன் ஸ்டைலிஸ்ட், டெக்ஸ்டைல் டிசைனர், செலிப்ரிட்டி ஸ்டைலிஸ்ட், கோரியோகிராபர் என பல்வேறு துறைகளில் அவர்கள் ஜொலிக்கலாம் என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் இணைந்து நடத்திய ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சியில் நிபுணர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’, அமிர்தா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ எனும் ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த தொடர் நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சேர்ந்த வல்லுநர்கள் உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்து மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக உரையாற்றுகின்றனர். அந்த வகையில், கடந்த 15-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் ஃபேஷன் டிசைன் படிப்புகள், அதற்கான வேலைவாய்ப்புகள் குறித்து நிபுணர்கள் உரையாற்றினர். அவர்கள் கூறியதாவது:

சென்னை இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் கல்வி நிறுவனத்தின் ஃபேஷன் துறை பேராசிரியை டாக்டர் அஃப்ரோஸ் ஃபரீத்:

பி.டெக்., பி.டிசைன். பி.எஸ்சி. என வெவ்வேறு நிலைகளில் ஃபேஷன் டிசைன் தொடர்பான படிப்புகள் வழங்கப்படுகின்றன. 3 ஆண்டுகால பி.எஸ்சி. படிப்பில் ஃபேஷன் டிசைன், காஸ்ட்யூம் டிசைன், அப்பரல் டிசைன் என பல்வேறு பாடப் பிரிவுகள் உள்ளன. பி.டிசைன் 4 ஆண்டுகால பட்டப் படிப்பு ஆகும். இதில் ஃபேஷன் டிசைன், ஃபேஷன் அப்பரல் டிசைன் என 2 பாடப் பிரிவுகள் இருக்கின்றன. இந்த படிப்புகள் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜி (நிஃப்ட்), சென்னை இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ், சென்னை ஃபுட்வேர் டிசைன் அண்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட் (எப்டிடிஐ), ஹெச்.சி.டி., நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் (என்ஐடி)உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களில் வழங்கப்படுகின்றன.

பி.டெக். ஃபேஷன் டெக்னாலஜி 4 ஆண்டுகால படிப்பு. இதை அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் சில பொறியியல் கல்லூரிகளிலும், நிஃப்ட் கல்வி நிறுவனத்திலும், சென்னைகேசிஜி டெக்னாலஜியிலும் படிக்கலாம்.

உயர்கல்வியை பொறுத்தவரை, எம்பிஏ, எம்எஸ்சி, எம்.டெக்., எம்.டிசைன்., எம்.பில்., பிஎச்.டி. என அடுத்தடுத்து வாய்ப்புகள் உள்ளன. இவற்றை ஐஐடி, நிஃப்ட் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பயிலலாம். இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் எம்.எஸ். ஃபேஷன் டெக்னாலஜி படிப்பு மிகவும் பிரபலமானது.

வேலைவாய்ப்பு என்று பார்த்தால், ஃபேஷன் டிசைன் படித்தவர்களுக்கு சுயதொழில், தனியார் நிறுவன வேலை,அரசுப் பணி என ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. ஃபேஷன் டிசைனர், இன்டீரியர் டிசைனர், காஸ்ட்யூம் டிசைனர், கிராஃபிக் டிசைனர், டெக்ஸ்டைல் டிசைனர், ஃபேஷன் ஸ்டைலிஸ்ட், செலிப்ரிட்டி ஸ்டைலிஸ்ட், யுஎக்ஸ், யுஐ டிசைனர், ஃபேஷன் மாடல், ஃபேஷன் போட்டோகிராபர், கோரியோகிராபர், விஷுவல் டிஸ்பிளே டிசைனர், புராடக்ட் டிசைனர், சோஷியல் மீடியா டிசைன் டெவலப்பர், ஈவென்ட் மேனேஜர், மியூசியம் கியூரேட்டர், க்ரியேட்டிவ் டைரக்டர் என பல்வேறு விதமான பணிகள் ஃபேஷன் டிசைனிங் மாணவர்களுக்கு காத்திருக்கின்றன.

சென்னை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜி (நிஃப்ட்) ஃபேஷன் டிசைன் துறையின் உதவி பேராசிரியை, மைய ஒருங்கிணைப்பாளர் பிரதீபா ராஜ்: ஃபேஷன் டிசைன் என்றதுமே வசதியுள்ள மாணவ, மாணவிகள் மட்டுமே படிக்கும் படிப்பு என்ற தவறான மனோபாவம் நிலவுகிறது. இது உண்மை அல்ல. யார் வேண்டுமானாலும், எந்த நிலையில் இருந்தாலும் ஃபேஷன் டிசைன் படிக்கலாம். நடுத்தரக் குடும்பத்தில் இருந்து இந்த படிப்பை படித்த நானே இதற்கு உதாரணம்.

ஃபேஷன் டிசைன், அப்பரல் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன் என 3 பிரிவுகளில் ஃபேஷன் டிசைன் படிக்கலாம். பட்டப் படிப்பில் பொதுப் பாடமாகபடித்துவிட்டு, அதன்பிறகு முதுகலை படிக்கும்போது லெதர் டிசைன் என்பதுபோல என ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பிரிவில் படிப்பது நல்லது. ஃபேஷன் டிசைன் படிக்க அரசு கல்வி உதவித் தொகையும் பெறலாம்.

மத்திய அரசு உயர் கல்வி நிறுவனமான நிஃப்ட்டில் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. வழக்கமாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு, நாளிதழ்களில் வெளியாகும். நிஃப்ட் இணையதளத்திலும் வெளியிடப்படும். இதற்கு டிசம்பருக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அடுத்து வரும் பிப்ரவரியில் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வு 3 நிலைகளை உள்ளடக்கியது. முதல் நிலையில், ஜெனரல் எபிலிட்டி டெஸ்ட் (GAT), க்ரியேட்டிவ் எபிலிட்டி டெஸ்ட் (CAT) ஆகிய தேர்வுகள் இடம்பெறும். 2-ம் நிலை தேர்வு, சூழ்நிலை தேர்வு (Situation Test). 3-ம் நிலையில் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான கல்லூரி, பாடப் பிரிவை தேர்வுசெய்ய வேண்டும்.

நிஃப்டில் ஃபேஷன் டிசைன் அப்பரல்டெக்னாலஜி தொடர்பான 2 ஆண்டுகால டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி மாலை நேர படிப்புகளும் (மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை) உள்ளன.

நேச்சுரல் சலூன் அண்ட் ஸ்பா இணை நிறுவனர், தலைமை செயல் அதிகாரி சி.கே.குமரவேல்: மாணவர்கள் கல்லூரியில் படிக்கும்போது தங்கள் பாடத்துடன், தங்களது தனித்தன்மையை அடையாளம் கண்டு, அதையும் மேம்படுத்தி வர வேண்டும். படிப்புக்கு செலவிடும் நேரத்தில் குறிப்பிட்ட அளவு நேரத்தை தனித்தன்மையை வளர்த்துக்கொள்ளவும் செலவிட வேண்டும்.

வாழ்க்கைக்கு தேவையான வாழ்வியல் திறமைகளை கல்லூரி காலத்தில் வளர்த்துக்கொள்வது பின்னாளில் பேருதவியாக இருக்கும். தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கை உயரும். எது செய்தாலும் சிறப்பாக, நேர்த்தியாக செய்ய வேண்டும் என்ற மனோபாவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

பிஎச்டி குறித்து அனைவருக்கும் தெரியும். நான் குறிப்பிடும் பிஎச்டி என்பது Passion (பேரார்வம்), Hunger (தாகம்), Discipline (ஒழுங்கு). இந்த ’பிஎச்டி’ படித்தால் வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்கு செல்லலாம். விடாமுயற்சி இருந்தால் கண்டிப்பாக முன்னேற முடியும். கற்றல் என்பது கல்வி நிறுவனத்துடன் நின்றுவிடாமல் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிறைவாக, மாணவர்களின் பல்வேறு கேள்விகள், சந்தேகங்களுக்கு நிபுணர்கள் விளக்கம் அளித்தனர். இந்த ஆன்லைன் நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார். இதை இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் இணைந்து நடத்தியது.

இதில் பங்கேற்க தவறியவர்கள் https://bit.ly/2Y6FaE9 என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் காணலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x