Last Updated : 17 Aug, 2020 10:28 PM

 

Published : 17 Aug 2020 10:28 PM
Last Updated : 17 Aug 2020 10:28 PM

100-க்கும் மேலான பாரம்பரிய கருவிகள் சேகரிப்பு: தோலிசையை இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் பணியில் மதுரை ஆசிரியர்  

மதுரை  

100-க்கும் மேலான பாரம்பரிய தோலிசைக் கருவிகளை சேகரித்து அதனை இளைய தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் மதுரையைச் சேர்ந்த இசை ஆசிரியர் ஒருவர்.

இன்றைய நவீன இசை வளர்ச்சியில் என்ன தான் எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் வந்தாலும், இசைக் கலைஞர்களால் நேரடியாக வாசிக்கும் இசையில் மட்டுமே அசல் இசை இனிக்கிறது.

ஒரு காலத்தில் நமது பாரம்பரிய தோலிசை கருவிகளுக்கு முக்கியத்துவம் இருந்தாலும், நாகரிக வளர்ச்சியில் அதன் பயன்பாடு குறைகிறது என, தோலிசைக் கலைஞர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

மறையும் இந்தப் பாரம்பரிய தமிழிசைக் கலைகளான பறை, தவில், மிருதங்கம் போன்ற தோலிசை கருவிகளை மீட்டெடுப்பதோடு, அவற்றை வாசிக்கக் கற்றுத்தந்து, இளைய தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கிறார் மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த எம்.ஆண்ட்ரூஸ். இவர் மதுரை வீரபாஞ்சான் டிவிஎஸ், மகாத்மா பள்ளிகளில் இசையாசிரியராக பணிபுரிகிறார்.

கலையார்வம் குறித்து ஆண்ட்ரூஸ் கூறியதாவது:

சிறுவயதில் இருந்தே கோயில், தேவாலயங்களில் தோலிசைக் கருவிகள் வாசிப்பை நேசிப்பேன். 2003-ல் மதுரை விளாச்சேரி பகுதியிலுள்ள அரசு இசைக் கல்லூரியில் பயின்றேன்.

மிருதங்கம், பறை, தபேலா போன்ற ஓரிரு இசையை வாசிக்கத் தெரிந்தாலும், தோலிசைக் கருவிகள் மீதான காதலால் அது குறித்த தேடலை உருவாக்கினேன். டிரம்ஸ், தவில், பறை (தப்பு), உருமி, பம்பை, உடுக்கை, கஞ்சிரா, கடசிங்காரி, டோல், தமுக்கு, மிருதங்கம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தோலிசைக் கருவிகளை சேகரித்து வைத்துள்ளேன். மேலும் ஏதேனும் தோலிசைக் கருவிகள் உண்டா என்ற தேடலிலும் உள்ளேன்.

ஒருசில கருவிகள் தவிர, அழிவின் விளிம்பிலுள்ள இக்கருவிகளை சேகரித்தால் போதாது முழுமையாக வாசிக்கக் கற்று, மாணவர்கள், இளைய தலை முறையினருக்கு கொண்டு சேர்க்கும் பணியில் 22 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளேன்.

டிஜிட்டல் வளர்ச்சியால் கலைஞர்களே இன்றி இசைக் கச்சேரிகள் நடக்கின்றன. என்னதான் டிஜிட்டல் கருவி வந்தாலும், அதிலிருந்து பிறக்கும் இசையின் ஒரிஜினல் தோலிசைக் கருவியாகவே இருக்க முடியும். டிஜிட்டல் கருவிகளில் அசல் இசையை எதிர்பார்க்க முடியாது.

என்னை மாதிரி இசைக் கலைஞர்களால் மட்டுமே குறிப்பிட்ட இசை எங்கிருந்து வந்தது எனக் கண்டறிய முடியும். இளையராஜா போன்றவர்கள் தான் இன்றும் இசை நிகழ்ச்சிகளில் தோலிசைக்கு முக்கியத்துவம் இருக்கிறது.

இந்தக் கலையை அனைவருக்கும் பரவலாக்கும் முயற்சியில் என்னைப் போன்றோர் ஈடுபட்டாலும், புதிய தமிழ் திரைப்படங்களில் தோலிசை, நாட்டுப்புற இசையிலான ஓரிரு பாடலுக்கு வாய்ப்பளித்தால் தோலிசைக் கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.

இக்கலையை மக்களுக்கும் நினைவுப்படுத்தி அழியாமல் காக்கலாம். எனக்கு அடையாளம் தந்த இக்கலையை என்னை நாடுவோருக்கும் முடிந்த வரை கற்றுத்தருவேன், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x