Published : 17 Aug 2020 01:36 PM
Last Updated : 17 Aug 2020 01:36 PM

வேலூர் மாவட்டத்துக்கு இரு மாவட்டக் கல்வி அலுவலகம் தேவை: தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

வேலூர் மாவட்டத்திற்கு இரண்டு மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம் தேவை என்று தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்துத் தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாவட்டச் செயலாளர் பொன்.வள்ளுவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

''வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் வாணியம்பாடி, அரக்கோணம் சேர்த்து ஐந்து கல்வி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் ஏராளமான அரசு/ அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், அரசு அங்கீகாரம் பெற்ற மழலையர் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள், அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், அரசு நிதியுதவி உயர்நிலை/ மேல் நிலைப் பள்ளிகள் உள்ளன.

அதாவது, வேலூர் மாவட்டத்தில், மொத்தமாக வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகஎல்லையில் 1266 பள்ளிகள் அமைந்துள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தமாக 980 பள்ளிகள் உள்ளன. அதாவது திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலக எல்லையில் 644 பள்ளிகள் உள்ளன. அதேபோல வாணியம்பாடி மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட பள்ளிகள் 336 ஆகும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 1168 பள்ளிகள் அமைந்துள்ளன. இதில் ராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட பள்ளிகள் 497 ஆகும். அரக்கோணம் கல்வி மாவட்டத்தில் 671 பள்ளிகள் அமைந்துள்ளன.

இந்த மூன்று மாவட்டங்களில் வேலூர் மாவட்டத்தில் அதிகப் பள்ளிகள் உள்ளன. ஆனால், அங்கு ஒரே ஒரு மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம் மட்டுமே உள்ளது.

வேலூர் மாவட்டம் மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஆறு கோட்டங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதில் வேலூர் மாவட்டத்தை வேலூர் கோட்டம், குடியாத்தம் கோட்டம் என இரண்டு கோட்டமாகவும், ராணிப்பேட்டை மாவட்டத்தை ராணிப்பேட்டை கோட்டம், அரக்கோணம் கோட்டம் என இரண்டு கோட்டமாகவும், திருப்பத்தூர் மாவட்டத்தை திருப்பத்தூர் கோட்டம், வாணியம்பாடி கோட்டம் என ஆறு வருவாய்க் கோட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் வேலூரில் ஒரு மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம் மட்டுமே உள்ளது. குடியாத்தம் கோட்டத்தில் மட்டும் கல்வி மாவட்டம் இல்லாமல் இருப்பது ஏன்?

காமராஜர் வெற்றி பெற்ற தொகுதி குடியாத்தம்:

தமிழக அரசு, முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளைக் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடி வருகிறது. காமராஜர் முதல்வராக இருந்தபோது குடியாத்தம் தொகுதியில்தான் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்று தமிழகத்தில் பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிகளைத் தொடங்கினார். காமராஜர் முதல்வராக இருக்கக் காரணமாக இருந்த குடியாத்ததை மையப்படுத்தி மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம் அமைத்துக் கொடுக்க வேண்டுமாய் தமிழக முதல்வரிடமும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடமும் கோரிக்கை வைக்கிறோம்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x