Last Updated : 14 Aug, 2020 07:37 AM

 

Published : 14 Aug 2020 07:37 AM
Last Updated : 14 Aug 2020 07:37 AM

இறுதி பருவத் தேர்வில் நீடிக்கும் இழுபறியால் பாலிடெக்னிக் மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு பாதிப்பு

சென்னை

பாலிடெக்னிக் கல்லூரிகளில் இறுதி பருவத் தேர்வு நடத்துவதில் தாமதம் நிலவுவதால் மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழக உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக கட்டுப்பாட்டில் 505 அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 3.1 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அதில், 98 ஆயிரம் பேர் இறுதியாண்டு படிப்பை முடித்து வெளியேற தயாராக உள்ளனர்.

இதற்கிடையே, ஊரடங்கால் பாலிடெக்னிக் கல்லூரிகள் கடந்த4 மாதமாக மூடப்பட்டுள்ளன. கரோனா தொற்று குறையாததால்1, 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகளை அரசு ரத்து செய்தது. அதேநேரம், இறுதியாண்டு பருவத் தேர்வு விவகாரத்தில் இழுபறி நிலவுவதால் மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது:

குறைந்த கல்விச் செலவு, வேலைவாய்ப்பு உறுதி என்பன போன்ற காரணங்களால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பெரும்பாலும் பாலிடெக்னிக் படிப்புகளை தேர்வு செய்கின்றனர்.

இறுதியாண்டுக்கான பருவத் தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்தி முடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், பலகல்லூரிகள் கரோனா தடுப்புமுகாம்களாக மாற்றப்பட்டுள்ளதால், தற்போதைய சூழலில் கல்லூரிகளை திறந்து தேர்வு நடத்த முடியாத நிலை உள்ளது. இதுதவிர, உயர் நீதிமன்ற வழக்குகளும் இடையூறாக இருப்பதால் இந்த விவகாரத்தில் தொடர் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மறுபுறம், பொருளாதார இழப்பால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் டிப்ளமோ படித்த மாணவர்களை குறைந்த ஊதியத்தில் பணிக்கு எடுக்க ஆர்வம் காட்டுகின்றன. ஆனால், பட்டயச் சான்றிதழ் இல்லாததால் அதற்கு விண்ணப்பிக்க முடியாத சூழலில் மாணவர்கள் உள்ளனர்.

இதுதவிர, பாலிடெக்னிக் இறுதியாண்டு தேர்வுகள் நடத்தப்படாததால் பொறியியல் நேரடி 2-ம் ஆண்டு சேர்க்கையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால், பொறியியல் கல்லூரிகளில் 2-ம்ஆண்டு வகுப்புகள் வரும் 12-ம்தேதி தொடங்க உள்ளன. இதனால், டிப்ளமோ முடித்தவர்கள் ‘லேட்டரல் என்ட்ரி’யில் தாமதமாக கல்லூரிகளில் சேரும் நிலை ஏற்படும். அதனால் அவர்களது கல்வி பாதிக்கப்பட வாய்ப்புஉள்ளது. எனவே, மாணவர்களின் எதிர்கால நலன் கருதி இறுதிஆண்டு தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x