Last Updated : 06 Aug, 2020 05:12 PM

 

Published : 06 Aug 2020 05:12 PM
Last Updated : 06 Aug 2020 05:12 PM

யூபிஎஸ்சி தேர்வில் முதல் 10 ரேங்க்குக்குள் வர முயற்சிப்பேன்; யூபிஎஸ்சி தேர்வில் வெற்றிப்பெற்ற திருப்பத்தூர் மாணவி நம்பிக்கை

யாமினி

திருப்பத்தூர்

யூபிஎஸ்சி தேர்வில் முதல் 10 ரேங்க்குக்குள் தேர்ச்சிப் பெற தொடர்ந்து முயற்சிப்பேன் என சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற திருப்பத்தூர் மாணவி யாமினி தெரிவித்தார்.

திருப்பத்தூர் டவுன் செட்டித் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன். குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். இவரது மனைவி கீதா, திருப்பத்தூர் அசோக்நகர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவரது மகள் யாமினி, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சிப் பெற்று 491 ரேங்க் பெற்றுள்ளார். இந்த மதிப்பெண்ணுக்கு ஐஏஎஸ் பணி கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தாலும், ஐபிஎஸ், ஐஆர்எஸ் பணி நிச்சயம் கிடைக்கும் என்றாலும், அடுத்த முறை நடைபெறும் யூபிஎஸ்சி தேர்வில் கலந்து கொண்டு முதல் 10 ரேங்க்குக்குள் வர தொடர்ந்து முயற்சிப்பேன் என மாணவி யாமினி தெரிவித்தார்.

இது குறித்து 'இந்து தமிழ்' நாளிதழிடம் யாமினி கூறுகையில், "திருப்பத்தூரில் உயர்நிலைப்பள்ளிப் படிப்பையும், ஊத்தங்கரையில் மேல்நிலை கல்வியையும் முடித்தேன். அதன் பிறகு பொறியியல் கல்வியில் முதுகலை முடித்து, திருச்சியில் உள்ள என்.ஐ.டி. கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்தேன். அங்கு பணியாற்றியபோது, சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது.

அதற்கான தேடலை தொடங்க ஆரம்பித்தேன். கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றிக்கொண்டே சிவில் சர்வீஸ் தேர்வு எழுத முடிவு செய்தேன். இதைத்தொடர்ந்து, படிக்கத் தொடங்கினேன். 2016-ம் ஆண்டு நடைபெற்ற யூபிஎஸ்சி தேர்வில் கலந்து கொண்டு எழுதினேன். தொடர்ந்து 2 முறை தோல்வியடைந்தேன். இதனால், மனம் தளர்ந்தேன்.

அப்போது, என் தந்தை மனோகரன் எனக்கு ஊக்கமளித்தார். கல்லூரியில் வேலை செய்து கொண்டே சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற முயற்சிப்பது அவ்வளவு சுபலமான காரியம் அல்ல என்பதை உணர்தேன். உடனே, என் வேலையை ராஜிநாமா செய்தேன். அதன் பிறகு சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் சேர்ந்து படித்தேன். தினந்தோறும் 15 மணி நேரம் படித்தேன். அதற்கான பலன் தற்போது கிடைத்துள்ளது.

யூபிஎஸ்சி தேர்வில் 491 ரேங்க் எடுத்துத் தேர்ச்சிப் பெற்றுள்ளேன். இந்த ரேங்க்குக்கு ஐஏஎஸ் பணி கிடைக்குமா? என தெரியவில்லை. ஐபிஎஸ் பணியில் சேர ஆர்வம் இருந்தாலும், ஒரு சில காரணங்களால் அது முடியாது என தெரிகிறது. இருப்பினும், ஐஆர்எஸ் பணியில் சேருவேன். அங்கு பணியாற்றியபடி மறுபடியும் யூபிஎஸ்சி தேர்வு எழுதி அடுத்த முறை முதல் 10 ரேங்க்குக்குள் வர தொடர்ந்து முயற்சிப்பேன்" என்றார், நம்பிக்கையுடன்.

யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சிப் பெற்ற திருப்பத்தூர் மாணவி யாமினியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் பாராட்டுகளையும் வாழத்துகளையும் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x