

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரிகளின் நவம்பர் மாத செமஸ்டர் தேர்வின் தேர்ச்சி விகிதப் பட்டியல் அண்மையில் வெளியாகியுள்ளது. இதில் 2 கல்லூரிகளில் மட்டுமே 80% தேர்ச்சி பதிவாகியுள்ளது. 35 கல்லூரிகளில் ஒற்றை இலக்க சதவீதத்தில்தான் மாணவர்களின் தேர்ச்சி உள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் உட்பட 523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று இயங்கி வருகின்றன.
அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 6 ஆண்டுகளாக, மாணவர்கள் பெறும் ரேங்க் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், பொறியியல் கல்லூரிகள் வாரியாக தேர்ச்சி விகிதப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இணையதளத்தில் (www.annauniv.edu) வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல், மே மற்றும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வுகளில் பிஇ, பிடெக் மாணவர்களின் தேர்ச்சி விவரங்களை கல்லூரிகள் வாரியாக தெரிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு கல்லூரியிலும் எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதினர், அவர்களில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர், தேர்ச்சி விகிதம் ஆகிய விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர இருக்கும் மாணவர்களுக்கு இந்த தேர்ச்சி விகிதப் பட்டியல் பெரிதும் உதவியாக இருக்கும். ஒவ்வொரு கல்லூரியின் தேர்ச்சி விகிதத்தை அறிந்துகொள்வதன் மூலம், அந்தக் கல்லூரியின் கல்வித் தரத்தை மாணவர்கள் ஓரளவு ஊகிக்கமுடியும்.
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்னர் ஆண்டுதோறும் இந்த தேர்ச்சி சதவீதத்தை வெளியிட வேண்டும் என நீதிமன்றத்தின் உத்தரவு உள்ளது. அதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன் இந்த விவரங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். .
இதில் 2019 நவம்பர் மாத செமஸ்டர் தேர்வில் தன்னாட்சி பெறாத அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற தனியார் பொறியியல் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்ச்சி விகிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலை. வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 443 கல்லூரிகளில் எந்தவொரு கல்லூரியும் 84 சதவீதத் தேர்ச்சியைத் தாண்டவில்லை. அதிகபட்சமாகக் கோயம்புத்தூரைச் சேர்ந்த தனியார் கல்லூரி, 83.77% தேர்ச்சி பெற்றுள்ளது.
2 பொறியியல் கல்லூரிகளில் இருந்து மட்டுமே 80% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 27 கல்லூரிகள் மட்டுமே 60 சதவீதத் தேர்ச்சி அடைந்துள்ளன. 68 பொறியியல் கல்லூரிகளில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்கள் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.11 கல்லூரிகளில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்களில் ஒருவர் கூடத் தேர்ச்சி அடையவில்லை.
இதில் 2019 ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வில் தனியார் பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை 36 கல்லூரிகள் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி பெற்றுள்ளன. 2 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களில் ஒருவர் கூடத் தேர்ச்சி பெறவில்லை.
இதுதொடர்பான புள்ளிவிவரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து மேலும் விவரங்களை அறிய: https://aucoe.annauniv.edu/passpercent/PASS_PERCENTAGE_UG_REGULAR_STUDENTS_ND19_WITH_TNEACODE_AFFILIATED.pdf