Last Updated : 31 Jul, 2020 05:52 PM

 

Published : 31 Jul 2020 05:52 PM
Last Updated : 31 Jul 2020 05:52 PM

நடைபாதையில் வசிக்கும் சிறுமி: 10-ம் வகுப்பில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றார்

நடைபாதையில் பிறந்து, வளர்ந்த சிறுமி 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி அஸ்மா ஷேக். அங்குள்ள ஆசாத் மைதானத்துக்கு வெளியே உள்ள நடைபாதையில் பெற்றோருடன் வசித்து வருகிறார். மிகுந்த சிரமங்களுக்கு இடையில் பள்ளியில் படித்தார். இந்த ஆண்டு 10-ம் வகுப்புத் தேர்வை எழுதியவர், 40 சதவீத மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய அஸ்மா ஷேக், ''என்னுடைய குடும்பத்தினர் நான் படிக்க உதவியாக இருந்தனர். அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத சூழலில், அவர்களால் அதிகபட்சம் என்ன முடியுமோ அதை எனக்கு அளித்தனர்.

மழையின்போது என்னுடைய அப்பா கிடைக்கும் பொருட்களை வைத்து மேற்கூரை அமைப்பார். பகலில் வாகன நெரிசல் காரணமாகப் படிக்க முடியாது என்பதால், இரவில் குறைந்த வெளிச்சத்தில் படிப்பதை வழக்கமாக்கினேன்.

இன்னும் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். எனினும் இந்த 40 சதவீத மதிப்பெண்கள் கிடைத்ததிலும் மகிழ்ச்சியே'' என்றார் அஸ்மா.

மகள் அஸ்மா குறித்து தந்தை சலீம் ஷேக் கூறும்போது, ''என் மகள் எந்த வகுப்பிலும் தோல்வி அடைந்ததே இல்லை. சொல்லப்போனால் மழலையர் வகுப்புகளிலும் 1-ம் வகுப்பிலும் முதல் மதிப்பெண் பெற்றாள்.

நான் படும் சிரமத்தை என் மகள் பட நான் விரும்பவில்லை. அதனாலேயே அவளைப் படிக்க வைப்பதில் உறுதியாக இருந்தேன். இந்தச் செய்தியை அறிந்த மும்பை வாசிகளும் பல்வேறு தலைவர்களும் உதவ முன்வந்துள்ளனர்.

இனி என் மகளின் கல்வி குறித்து கவலைகொள்ளத் தேவையில்லை'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x