Published : 28 Jul 2020 06:52 AM
Last Updated : 28 Jul 2020 06:52 AM

இன்டர்நெட் உலகில் ஆயிரக்கணக்கில் வேலைவாய்ப்புகள்; கைநிறைய சம்பளம் தரும் சைபர் செக்யூரிட்டி துறை: ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சியில் நிபுணர்கள் தகவல்

சைபர் செக்யூரிட்டி நிபுணர்களுக்கு கைநிறைய சம்பளத்தில் உடனடி வேலைவாய்ப்பு காத்திருக்கிறது என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் இணைந்து நடத்தும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் துறை வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், அமிர்தா விஷ்வ வித்யாபீடமும் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற தொடர் நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்தி வருகின்றன. கடந்த 24-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி 15 நாட்கள் நடக்கிறது. இதன் 3-வது நாள் நிகழ்ச்சியில் எம்பெடட் சிஸ்டம், இன்டர்நெட் ஆப் திங்ஸ் (ஐஓடி) சைபர் செக்யூரிட்டி படிப்புகள் குறித்து துறைசார்ந்த வல்லுநர்கள் உரையாற்றினர். அவர்கள் கூறியதாவது:

கோவை அக்னா இன்க் நிறுவன தலைமை செயல் அதிகாரி பி.சுரேஷ்குமார்: கடந்த 18-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த இயந்திரமயமாக்கல் என்பது தொழில்புரட்சி 1.0 என்றும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிக உற்பத்தி, தொழில்புரட்சி 2.0 என்றும் பின்னர் நிகழ்ந்த மின்னணு, தகவல் தொழில்நுட்ப புரட்சி 3.0 என்றும் அழைக்கப்பட்டன. தற்போது நடக்கும் 4-வது தொழில்புரட்சி, அதாவது அனைத்தும் ஆட்டோமேஷன் என்பதை இண்டஸ்ட்ரி 4.0 என்று கூறுகின்றனர். இது செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா, டேட்டா அனலிட்டிக்ஸ், இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் (ஐஓடி), விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமென்டட் ரியாலிட்டி, சிமுலேஷன், ஆட்டோமேஷன் என பல்வேறு தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது. ஐஓடி என்பது ஒவ்வொரு தொடர்புகளையும் ஒன்றுடன் ஒன்று இணைத்து, அதன்மூலம் தேவையான சேவைகளைப் பெறுவது மற்றும் தகவல்களைத் திரட்டி பரிமாறிக்கொள்வது. தற்போது மிக வேகமாக வளர்ந்துவரும் இத்துறை ஏராளமாக வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய தொழில்நுட்பமாக உருவெடுத்துள்ளது.

டிஜிட்டல் மார்க்கெட்டிங், சோஷியல் மீடியா, அனலிட்டிக்ஸ், சைபர் செக்யூரிட்டி என பல்வேறு துறைகளில் இதன் பயன்பாடுகள் விரிந்து பரந்துள்ளன. வானிலை கணிப்புகள், விவசாயம், சுற்றுச்சூழல், சுகாதாரம், தகவல் தொடர்பு, உணவு உற்பத்தி தொடர்பான ஆய்வில் இதன் பங்களிப்பு அதிகம். டிசைன், மேம்பாடு, ஆராய்ச்சி, சேவை, உற்பத்தி என பல்வேறு தளங்களில் சுயதொழில் வாய்ப்புகளை இத்துறை வாரி வழங்குகிறது. மிகக் குறைந்த முதலீட்டில் சுயமாக தொழில் தொடங்க முடியும் என்பது இத்துறையின் சிறப்பு அம்சம்.

அமிர்தா விஷ்வ வித்யாபீடம் சென்னை வளாக அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங் கல்லூரியின் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை உதவி பேராசிரியர் டி.சுதாகர்: தற்போது டிஜிட்டல் யுகத்தில் வாழ்கிறோம். தங்கும் விடுதிக்கு முன்பதிவு செய்வது, வாடகை கார் சேவை, வங்கி பணப் பரிமாற்றம் என அனைத்து பணிகளையும் இன்டர்நெட் உதவியால் எளிதில் முடித்துவிடுகிறோம். இன்டர்நெட் என்பது திறந்தவெளி தொழில்நுட்பம். எனவே, அதில் வசதிகளைப் போல குற்றங்களுக்கான (சைபர் கிரைம்) அபாயமும் அதிகம். சைபர் அட்டாக்ஸ் (இணையவழி தாக்குதல்கள்) என்று குறிப்பிடும்போது மால்வேர், பிஷ்ஷிங், பாஸ்வேர்டு அட்டாக், மால்அட்வர்டைசிங், ரோக் சாப்ட்வேர் என பல வகைகள் உள்ளன. கம்ப்யூட்டர் உதவியுடன் நடத்தப்படும் தாக்குதலாகவும், சிலநேரம் கம்ப்யூட்டரை இலக்காக வைத்து நிகழ்த்தப்படும் தாக்குதலாகவும் சைபர் கிரைம்கள் அமைகின்றன. பிளாக் ஹேட், கிரே ஹேட், ஒயிட் ஹேட், சூசைடு ஹேட் என வெவ்வேறு விதமான ஹேக்கர்கள் உள்ளனர்.

இத்தகைய சூழலில் சைபர் செக்யூரிட்டி என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. சாப்ட்வேர், ஹார்டுவேர், டேட்டா, நெட்வொர்க் போன்றவற்றை இணையவழி தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதுதான் சைபர் செக்யூரிட்டி. இத்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. நிபுணர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே இருப்பதால், அதிக சம்பளம் பெறலாம். பணி உயர்வுக்கான வாய்ப்பும் அதிகம். எனவே, தாராளமாக சைபர் செக்யூரிட்டி படிப்பை தேர்வுசெய்து படிக்கலாம். இதற்கு ஏதேனும் ஒரு புரொகிராமிங் லாங்வேஜ் (பைத்தான், நெட், பாஷ்) தெரிந்திருப்பது நல்லது. ஐஐடி, என்ஜடி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் விஐடி, அமிர்தா உள்ளிட்ட தனியார் கல்வி நிறுவனங்களிலும் பி.டெக். சைபர் செக்யூரிட்டி படிப்பு வழங்கப்படுகிறது. அமிர்தா சென்னை வளாகத்தில் இப்படிப்பு இந்த ஆண்டு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

பெங்களூரு சாப்ட்வேர் அண்ட் சிஸ்டம்ஸ் அனலாக் டிவைசஸ் நிறுவனத்தின் இயக்குநர் சீனிவாஸ் பிரசாத்: எம்பெடட் சிஸ்டம்ஸ், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், சைபர் செக்யூரிட்டி ஆகிய மூன்றும் வெவ்வேறு துறைகள் என்றாலும், அவை ஒன்றுக்கு ஒன்று நெருங்கிய தொடர்பு உடையவை. இந்த 3 துறைகளுக்கும் ஏராளமான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளில் இத்துறைகளில் புதிதாக 35 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. படிப்பை பின்புலமாக கொண்டவர்கள் எம்பெடட் சிஸ்டம் படிக்கலாம். அடிப்படையில் இது சாப்ட்வேர், ஹார்டுவேர் தொடர்பான படிப்பு.

இந்தியாவில் இன்னும் ஐந்தாறு ஆண்டுகளில் அனைத்து சேவைகளிலும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் தொழில்நுட்பம் வந்துவிடும். ஒவ்வொரு பொருளின் பயன்பாட்டிலும் முன்பிருந்த சாப்ட்வேர் வசதியின் பங்களிப்பு தற்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது. வரும் காலத்தில் இத்துறையில் வாய்ப்புகளும் இன்னும் அதிகரிக்கும். இந்தியாவில் 40 ஆயிரம் பன்னாட்டு நிறுவனங்கள் இயங்குகின்றன. இவை தவிர, உள்நாட்டு நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. எனவே, எந்த சூழலிலும் வேலைவாய்ப்புக்கு குறைவு இருக்காது.

பொறியியல் படிப்பை முடித்து வேலையில் சேரும் இளைஞர்கள் கற்றலை அதோடு நிறுத்திவிடக் கூடாது. தொடர்ந்து கற்பது அவசியம். அப்போதுதான் பணியில் நிலைத்து நிற்க முடியும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர், பொறியியல் படிப்பு, எதிர்கால வேலைவாய்ப்புகள் தொடர்பாக மாணவர்கள், பெற்றோர் எழுப்பிய கேள்விகள், சந்தேகங்களுக்கு துறை வல்லுநர்கள் விரிவாக விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார். இந்த நிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://bit.ly/3eWMLL2 என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் பார்க்கலாம்.

‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இதில், பங்கேற்க கட்டணம் எதுவும் இல்லை. மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டு பயன்பெறலாம். பங்கேற்க விரும்புபவர்கள் http://connect.hindutamil.in/uuk.php என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளவும்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x