Last Updated : 27 Jul, 2020 04:04 PM

 

Published : 27 Jul 2020 04:04 PM
Last Updated : 27 Jul 2020 04:04 PM

பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கோவையில் 14 மையங்களில் பிளஸ் 2 மறுதேர்வு

கோவையில் போதிய பாதுகாப்புகளுடன் 14 மையங்களில் பிளஸ் 2 மறுதேர்வு நடைபெற்றது.

அரசு தேர்வுகள் துறை சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், 2019-2020 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி, 24-ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை கோவை மாவட்டத்தில் 32,874 பேர் எழுதினர்.

இதற்கிடையில் கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக மார்ச் மாத இறுதியில் நடைபெற்ற தேர்வுகளை சிலர் மாணவர்கள் எழுதவில்லை. இதையடுத்து மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற தேர்வை எழுதாமல் தவறவிட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதனடிப்படையில் இன்று (ஜூலை.27) தமிழகம் முழுவதும் இத்தேர்வை எழுத 758 மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் விண்ணப்பித்திருந்தனர்.

இதன்படி மார்ச் 24-ம் தேதி அட்டவணையின்படி வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான மறுதேர்வு இன்று (ஜூலை 27) நடைபெற்றது. இதற்காக கோவை மாவட்டத்தில் 14 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தவாறு ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு மாணவர்கள் காலை 9 மணி முதல் வரத் தொடங்கினர். அவர்களுக்கு சளி, காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் கிருமிநாசினியைக் கைகளில் தடவிக் கொண்டு, முகக் கவசத்துடன் தேர்வறைக்குச் சென்றனர். வரிசைக்கு ஒருவர் வீதம் மட்டுமே குறுக்கு, நெடுக்காக அமர வைக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது. அனுமதிக்கப்பட்ட 22 பேரில், இத்தேர்வை 18 மாணவர்கள் எழுதினர். 3 தனித்தேர்வர்கள், 1 மாணவர் என 4 பேர் தேர்வெழுத வரவில்லை.

இத்தேர்வு குறித்து மாணவர்கள் கூறும்போது, 'கரோனா வைரஸ் தொற்று காரணமாக இறுதியாக நடைபெற்ற தேர்வை எழுத முடியாமல் போனது. இன்று நடைபெற்ற தேர்வு எளிதாக இருந்தது. ஏற்கெனவே பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. அதற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் நிரந்தர மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

மறுதேர்வு எழுதியவர்களுக்குப் பொதுத்தேர்வு எழுதியதற்கான மதிப்பெண் சான்றிதழ், மறுதேர்வு எழுதியதற்கான மதிப்பெண் சான்றிதழ் என இரு மதிப்பெண் சான்றிதழ்களாக வழங்காமல் தேர்வு முடிவின் அடிப்படையில் ஒரே மதிப்பெண் சான்றிதழாக வழங்குமாறு அரசு தேர்வுகள் துறையை வலியுறுத்துகிறோம்' என்றனர்.

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்.


அரியலூர் மாவட்டத்தில் 3 மாணவர்கள்
அதே போல அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 4 மாணவர்கள், மான்ஃபோர்ட் மெட்ரிக் பள்ளியில் ஒரு மாணவர் என 5 மாணவர்கள் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் மான்ஃபோர்ட் பள்ளியில் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர், அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுத விண்ணப்பித்த மாணவர் என இரண்டு பேர் தேர்வு எழுத வரவில்லை.

இவர்களது விடைத்தாள்கள் விரைவில் திருத்தப்பட்டு மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகள் வெளியிடப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x