பிளஸ் 1 வகுப்பிலேயே விலையில்லா மடிக்கணினி வழங்கியதால் பிளஸ் 2 பாடங்கள் வீடியோ பதிவேற்றம்; மகிழ்ச்சியில் மாணவிகள்

விலையில்லா மடிக்கணினிகளுடன் மாணவிகள்
விலையில்லா மடிக்கணினிகளுடன் மாணவிகள்
Updated on
2 min read

தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் பிளஸ் 2 முடித்த பிறகே மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2018-19 கல்வியாண்டு முதல் பிளஸ் 1 படிக்கும்போதே மடிக்கணினி வழங்கும் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தார். இதையடுத்து, கடந்த இரு வருடங்களாக பிளஸ் 1 மாணவர்களும் மடிக்கணினி பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தச் சூழலில், கரோனா தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளி திறப்பதற்கான காலமும் தொடங்கிய நிலையில், கரோனா தொற்று காரணமாக பள்ளிகளைத் திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, மாணவர்களுக்கு எந்த வகையிலாவது கல்வி போதிக்க வேண்டும் என்ற நெருக்கடியால், அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்படும் என பள்ளக் கல்வித்துறை அறிவித்திருந்தது.

இதனிடையே, பிளஸ் 1 முடித்து, தற்போது பிளஸ் 2 வகுப்புக்குச் செல்லும் மாணவர்களுக்கு வீடியோ பதிவேற்றம் மூலம் பிளஸ் 2 பாடங்களைப் பதிவேற்றும் பணியை அந்தந்தப் பள்ளி கணினி ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிஞ்சிப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (ஜூலை 22) சீருடை அணிந்து மடிக்கணினியுடன் மாணவிகள் பள்ளிக்குச் சென்றனர். அப்போது, அவர்களிடம் விசாரித்தபோது, பிளஸ் 2 பாடங்களை வீடியோ பதிவேற்றம் செய்து தருவதாகவும், அதை வைத்து வீட்டில் படிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கூறியதைத் தொடர்ந்து பள்ளிக்குச் செல்கிறோம் என்றனர்.

இதையடுத்து, பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் விசாரித்தபோது, "கரோனா காலத்தில் 50 சதவிகித ஆசிரியர்கள் தற்போது பள்ளிக்கு வருகை புரிந்து கொண்டிருக்கிறோம். தற்போது, பிளஸ் 2 வகுப்புக்குத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பாடம் நடத்த வேண்டும். ஆனால், பள்ளி மூடப்பட்டுள்ளதால், அவர்களிடம் அரசு ஏற்கெனவே வழங்கிய மடிக்கணினி இருப்பதால், அதில் பாடங்களை வீடியோவாகப் பதிவேற்றம் செய்து, வீட்டிலிருந்தபடியே படிக்க வைக்க முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதற்கான முதல் பருவத்திற்கான பாடத் திட்டங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ தொகுப்பை அனைத்து மடிக்கணினிகளிலும் பதிவேற்றும் செய்து தருகிறோம். இதற்காக, பாடத்திட்ட வாரியாக மாணவிகளைப் பள்ளிக்கு வரவழைத்து பாடத்திட்டங்களைப் பதிவேற்றம் செய்து கொடுக்கிறோம்.

மாணவர்கள் வீட்டில் இதைப் பார்த்துப் படிக்கலாம், அப்போது அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் எழுந்தால், அந்தப் பாடத்தின் ஆசிரியரை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்" என்றனர்.

இது தொடர்பாக கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரோஸ்மேரியிடம் கேட்டபோது, "மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 19 ஆயிரத்து 971 மாணவர்களில், 14 ஆயிரத்து 65 மாணவர்களின் மடிக்கணினியில் பாடத்திட்ட வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 5,906 மாணவர்களின் மடிக்கணினியிலும் ஓரிரு தினங்களில் பதிவேற்றம் செய்யப்படும்" என்றார்

இதையடுத்து, மாணவிகளிடம் பேசியபோது, "பிளஸ் 1 படிக்கும் போதே அரசு விலையில்லா மடிக்கணினி வழங்கியதால், இதுபோன்ற நெருக்கடியான காலத்தில் எங்களுக்குப் பேருதவியாக அமைந்துள்ளது. அதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். முகக்கவசம் அணிந்து குழு குழுவாக வரச் சொல்கின்றனர். ஒரு மடிக்கணினியில் வீடியோ பதிவேற்றம் செய்ய 20 நிமிடம் ஆகிறது. சில மாணவியருக்கு மடிக்கணினி பழுதடைந்துள்ளது. அவற்றையும் சீர்செய்து வீடியோ பதிவேற்றம் செய்து தரவேண்டும்" என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in