

மாணவர்களின் மன நலனைக் காக்கும் வகையில் மனோதர்பன் என்னும் திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று மெய்நிகர் நிகழ்ச்சி மூலம் தொடங்கி வைத்தார்.
கோவிட் நோய்த்தொற்று சூழலில் மாணவர்களின் கல்வி கற்றல் முறையைத் தொடரச் செய்வதும் அவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதும் அவசியம். இதை முன்னிட்டு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மனோதர்பன் என்ற பெயரிலான திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. கோவிட் நோய்ப் பரவல் காலத்திலும், அதற்குப் பிந்தைய காலத்திலும் மாணவர்களின் மனநலம் மற்றும் ஆரோக்கியத்துக்கு உதவும் வகையில் உளவியல் மற்றும் சமூகவியல் சார்ந்த அணுகுமுறைகளைக் கொண்டதாக இது இருக்கும்.
கோவிட்-19 நோய்ப் பரவலுக்குப் பிறகு இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த தற்சார்பு இந்தியா என்ற திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மனித ஆற்றலைப் பலப்படுத்துதல், உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்தல், கல்வித் துறையில் செம்மையான சீர்திருத்தம் மற்றும் சிறந்த முன்முயற்சிகள் போன்ற அம்சங்களை உள்ளடக்கியதே தற்சார்பு இந்தியா திட்டமாகும். இதன் கீழ் மனோதர்பன் திட்டம் தொடங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
http://manodarpan.mhrd.gov.in/ என்ற இணையதளம் இதற்கென உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஆலோசனைகள், குறிப்புகள், காணொலிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேசிய அளவிலான கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணும் (844 844 0632) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை 11 மணிக்குத் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சஞ்சய் தோட்ரே, உயர் கல்வித் துறையின் செயலாளர் அமித் காரே, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அமைச்சர் அனிதா கர்வால், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆரோக்கியமான, மன அழுத்தங்கள் இல்லாத வாழ்க்கை முறையை உருவாக்க இதில் சேர வேண்டும் என மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அமைச்சர் பொக்ரியால் அழைப்பு விடுத்துள்ளார்.