

சிஐஎஸ்சிஇ, சிபிஎஸ்இ-ஐத் தொடர்ந்து ஹரியானாவில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாநிலப் பாடத்திட்டத்தைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய கல்வியாண்டான ஜூன் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவில்லை. கோவிட் பரவல் காலத்தில் ஏற்பட்டுள்ள கல்வி வேலை நாட்கள் குறைப்பால், பாடத்திட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது.
இதைத் தொடர்ந்து தனியார் பள்ளி வாரியமான சிஐஎஸ்சிஇ, 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை 25 சதவீதம் குறைத்தது. இதைத் தொடர்ந்து சிபிஎஸ்இ, தனது பாடத்திட்டத்தை 30 சதவீதம் வரை குறைத்தது. இந்நிலையில் முதல் மாநிலமாக ஹரியானாவில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாநிலப் பாடத்திட்டத்தைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அம்மாநிலக் கல்வித் துறை அமைச்சர் கன்வார் லால் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”மாநிலப் பள்ளிக் கல்வி வாரியத்துடன் எஸ்சிஇஆர்டி இணைந்து குழு ஒன்றை அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அக்குழு பாடத்திட்டக் குறைப்பைச் செயல்படுத்தும்.
கரோனா சூழலில் மாணவர்கள் பாடங்களைச் சுமையாகவோ மன அழுத்தமாகவோ கருதிவிடக் கூடாது. இதைக் கருத்தில் கொண்டே 9 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் பாடத்திட்டம் குறைக்கப்பட உள்ளது.
தற்காலிக நடவடிக்கையாக 9 - 12 ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கற்பித்தலை நிகழ்த்த முடிவெடுத்துள்ளோம். இதற்காக அவர்களுக்கு டேப்லெட்டுகளை வழங்கத் திட்டமிட்டு வருகிறோம். எனினும் அரசின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படும். ஆன்லைன் வகுப்பில் கற்பிக்கப்படும் பாடங்களும் பாடத்திட்டத்தில் இணைக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.