Published : 02 Jul 2020 05:23 PM
Last Updated : 02 Jul 2020 05:23 PM

அமெரிக்காவிலிருந்து நீளும் கல்விக் கரங்கள்! இந்திய மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் இலவச வகுப்புகள்

வாழ்வின் வெற்றிக்கான ஏணிப்படி கல்விதான். எல்லோருக்கும் சமமான, தரமான கல்வி கிடைப்பதே நல்ல ஜனநாயகத்துக்கு எடுத்துக்காட்டு. ஆனால், சமமான கல்வி அனைவருக்கும் கிடைப்பதில்லை. பணம் கொழிக்கும் துறையாக கல்வி மாறியதன் விளைவே இது! பணம் கொடுத்து 'டியூஷன்' சென்றாலும், மனப்பாடம் செய்ய வைத்து, வெறும் மதிப்பெண்களுக்கு மட்டும் உதவக்கூடிய கல்வியே கற்றுத் தரப்படுகிறது.

எளிய உதாரணங்களுடன், அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திக் கற்றுக்கொடுக்கும் கல்வியே வாழ்நாள் முழுவதும் பலனளிக்கும். மேல்தட்டு வர்க்கக் குடும்பத்தின் குழந்தைகளுக்குக் கிடைக்கும் தரமான கல்வி, நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர குடும்பப் பின்னணியில் உள்ள மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டுமெனக் கருதினார் பள்ளி மாணவர் ஆதித்யா.

அமெரிக்காவில் வாழும் இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த, பத்தாம் வகுப்பு மாணவரான ஆதித்யா, கரோனா கால விடுமுறையை இதற்குப் பயன்படுத்திக் கொண்டார்.

தொடக்கத்தில், அமெரிக்காவில் உள்ள சில ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக டியூஷன் எடுத்துள்ளார் ஆதித்யா. அப்போது, அவரது தாய் காயத்ரி, "இந்தியாவில் இதுபோன்று மாணவர்களுக்குப் புரியும் வரையில் தொழில்நுட்ப உதவியுடன் கல்வி கிடைப்பதில்லை, இந்திய தேசத்துக்கும் இதுபோன்ற சேவை கிடைத்தால் நன்றாக இருக்குமே" என்று கூறியுள்ளார்.

ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் இந்திய மாணவர்.

இதையடுத்து, நண்பர்கள் நிகில் தேவராஜ், அனிருத்துடன் இணைந்து 'எஜூகேஷனிஸ்ட் டியூடரிங் சர்வீஸை' (Educationist tutoring service) கடந்த மே மாதம் தொடங்கினார் ஆதித்யா. இந்தச் சேவையை அரசு சாரா லாப நோக்கமற்ற அமைப்பாக உருவாக்கி, இலவசமாக ஆன்லைன் வழியாக டியூஷன் சேவையை வழங்கி வருகிறார்கள்.

தற்போது இந்தியாவில் 6 முதல் 13 வயது வரையுள்ள மாணவர்களுக்கு, அதாவது ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பயில்பவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள். இவ்வகுப்புகள் அமெரிக்கக் கல்வி முறையின் உயர்தர அடிப்படைகளைத் துல்லியமாக விளக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஆரம்பத்தில் ஆதித்யா, நிகில், அனிருத் ஆகியோர் மட்டும் பாடங்களை நடத்தியுள்ளனர். இவர்களால் ஊக்கம் பெற்ற பல மாணவர்களும் பின்னர் இந்த அரும்பணியில் இணைந்தனர்.

தற்போது அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்நாடு, கேரளா மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்த பல மாணவர்களும் தன்னார்வலர்களாக இணைந்து, ஆன்லைனில் இந்திய மாணவர்களுக்கு 'டியூஷன்' எடுக்கின்றனர். அமெரிக்காவில் இருந்து மட்டுமல்லாமல், மும்பை மற்றும் தமிழகத்தில் இருந்தும் தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர். இப்பணி தற்போது பெரும் இயக்கமாக மாறியுள்ளது.

ஆங்கிலம், அறிவியல், கணிதம், அடிப்படை கம்ப்யூட்டர் கோடிங், செஸ் விளையாட்டு உள்ளிட்டவை கற்றுத் தரப்படுகின்றன. மாணவர்களுக்குப் புரியும் வரையில் ஒவ்வொரு பாடமும் பொறுமையாகவும், உற்சாகத்துடனும் கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு வகுப்பும் 35 நிமிடங்கள் நடைபெறுகிறது.

ஊரடங்கால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் முடங்கிக் கிடக்கும் எண்ணற்ற ஏழை மாணவர்கள், தங்கள் அமெரிக்க நண்பர்களின் உதவியால் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் கல்வியைத் தொடர்கிறார்கள்.

இந்தச் சேவை குறித்து ஆதித்யா கூறும்போது, "அடிப்படைக் கல்வியை நன்கு கற்பித்தால், மாணவர்கள் படிப்பில் ஆர்வத்துடன் இருப்பார்கள். எனக்குக் கிடைத்த தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடனே இந்தச் சேவையைத் தொடங்கினேன். எங்களுடன் இணைந்து தன்னார்வலர்களாகப் பங்காற்ற ஆர்வமுடையவர்களை வரவேற்கிறோம்.

https://educationisttutoring.org, educationisttutoring@gmail.com மூலம் விண்ணப்பித்து, தங்களை இணைத்துக் கொள்ளலாம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x