

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை 15 அன்று வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டு கட்டமாக நடைபெறுவதாக இருந்தன. தேர்வுகள் நடைபெற்று வந்த சூழலில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 29 பாடங்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்தத் தேர்வுகள் வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடத்தப்படுவதாக இருந்தன.
எனினும் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் தேர்வுகளை நடத்தக்கூடாது என்று பெற்றோர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், சிபிஎஸ்இ உரிய பதிலளிக்க உத்தரவிட்டது.
இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் விளக்கமளித்த சிபிஎஸ்இ வாரியம், ஜூலை மாதத்தில் நடைபெறுவதாக இருந்த சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.
இந்நிலையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை 15 அன்று வெளியாகும் என்று சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் இன்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''கோவிட்-19 காய்ச்சல் பரவலால் ஒத்தி வைக்கப்பட்ட பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு மாற்று மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். முந்தைய தேர்வுகளின் மதிப்பெண்கள் மற்றும் அக மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அளிக்கப்படும்.
எனினும் தேர்வெழுதி மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள் உகந்த சூழல் ஏற்படும்போது நடத்தப்பட உள்ள தேர்வில் கலந்துகொள்ளலாம். இவர்களுக்குத் தேர்வு முடிவுகளில் பெறும் மதிப்பெண்களே இறுதியானவை.
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்படாது. அவர்களுக்கு வாரியம் வழங்கும் மதிப்பெண்களே இறுதி மதிப்பெண்களாகக் கருத்தில் கொள்ளப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வின் மூலம் மதிப்பெண்களைக் கூடுதலாகப் பெறும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.