

கோவை அரசு கலைக் கல்லூரி மைக்ரோசாஃப்ட் செயலியின் சந்தாதாரர் ஆகி ஆன்லைன் மயமாகிறது.
கோவை அரசு கலைக் கல்லூரியில் 20 இளநிலை பட்டப் படிப்புகளும், 21 முதுநிலை பட்டப் படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல் எம்.ஃபில்., பிஎச்.டி. படிப்புகள் பகுதி நேரமாகவும், முழுநேரமாகவும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 5,500 மாணவ, மாணவிகள் மற்றும் ஆய்வாளர்கள் படித்து வருகின்றனர். 266 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் கல்லூரி மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்குப் பாடங்களை நடத்துவதற்கும், அவர்களைத் தேர்வுக்கு தயார்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகளைக் கல்லூரி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் க.சித்ரா கூறியதாவது:
’’இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களையும், ஆசிரியர்களையும் இணையதளம் வழியாக ஒருங்கிணைக்கும் வகையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சந்தாதாரர் ஆகியுள்ளோம். இதன்மூலம் மைக்ரோசாஃப்ட் டீம் செயலியில் இங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்குத் தனித்தனி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
இதேபோல் துறைவாரியாக மாணவர்களின் பெயர்கள் இச்செயலியில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மெய்நிகர் ஆன்லைன் வகுப்புகள், பாடங்களைப் பகிர்தல், இணையவழி கருத்தரங்கம், காணொலி உரையாடல்களை நடத்த முடியும்.
ஒவ்வொரு வகுப்புக்கும் 10 ஜி.பி. இணையம் வழங்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்படும். இதுகுறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது. தேவை ஏற்படும்போது மாணவர்களை ஒருங்கிணைத்து வகுப்புகள் நடத்துவதற்கு உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’’.
இவ்வாறு அவர் கூறினார்.