

கரோனா சிகிச்சைக்காக ஆடிட்டோரியத்தைத் தரத் தயார் என்று அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்திலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகத் தலைநகர் சென்னையில் தினந்தோறும் 1000-க்கும் அதிகமான நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை, சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதற்கிடையே சென்னை மாநகராட்சி தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு கல்வி நிறுவனங்கள் தனிமைப்படுத்தல் முகாம்களாகவும் மருத்துவ சிகிச்சை மையங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், கரோனா மருத்துவ முகாம் அமைக்க குறிப்பிட்ட காலத்துக்குள் அண்ணா பல்கலைக்கழக விடுதிகளை ஒப்படைக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு சென்னை மாநகராட்சி கடிதம் அனுப்பியது.
இதற்கிடையே விடுதிகளில் மாணவர்கள் உடைமைகள் இருப்பதாகவும் அவற்றை அப்புறப்படுத்த முடியாது என்றும் அண்ணா பல்கலை. பதில் கூறியிருந்தது. இந்நிலையில், கரோனா சிகிச்சைக்காக சென்னை மாநகராட்சிக்கு மாணவர் விடுதிக்குப் பதில் ஆடிட்டோரியத்தைத் தரத் தயார் என அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.