10-ம் வகுப்பு மதிப்பெண்களில் குளறுபடி செய்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

10-ம் வகுப்பு மதிப்பெண்களில் குளறுபடி செய்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை
Updated on
1 min read

10-ம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்புப் படித்த மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

காலாண்டு மற்றும் அரையாண்டில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களுக்கு 80 சதவீத மதிப்பெண்களும், வருகைப் பதிவேட்டை அடிப்படையாக வைத்து 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இதையடுத்து தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு விடைத்தாள் மதிப்பெண்களில் முறைகேடு செய்வதாகப் புகார்கள் எழுந்தன. மாணவர்களின் மதிப்பெண்கள் மாற்றப்படுவதாகவும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 10-ம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''நியாயமான முறையில் மட்டுமே இந்தப் பணி நடக்க வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலரிடம் விடைத்தாள்கள் ஒப்படைக்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகளின் தேர்வு முடிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். குறைபாடுகள் கண்டறியப்பட்டால்’ குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்படும்'' என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in