

ஜூலை முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. கரோனா தொற்று அச்சத்தால் தேர்வெழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இதற்கிடையே இருமுறை ஒத்தி வைக்கப்பட்ட, 12-ம் வகுப்புத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, தமிழகம் முழுவதும் மே 27-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்கான பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜூலை முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
கரோனா வைரஸ் காரணமாகப் பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தாமதம் ஆகியுள்ளது. இம்மாத இறுதிக்குள் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி நிறைவடையும். புத்தகம் தயாரானதும், முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு வந்துவிடும். அதைத் தொடர்ந்து முதல்வரின் ஒப்புதல் பெற்று உடனடியாகப் புத்தகங்கள் வழங்கப்படும்.
பாடத் திட்டங்களைக் குறைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.