

பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களிடம் மறுதேர்வு எழுதுவதற்கு விருப்பக் கடிதம் பெற தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தேர்வுத் துறைஇயக்குநர் (பொறுப்பு) மு.பழனிச்சாமி, அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது:
ஜூன் 24-ம் தேதிக்குள்...
கடந்த மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 வகுப்புக்கான வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் பாடத்தேர்வில் கணிசமான மாணவர்கள் பங்கேற்கவில்லை. இதையடுத்து தேர்வில் பங்கேற்காத மாணவர்களிடம் இருந்து மறுதேர்வு எழுதுவதற்கான விருப்பக் கடிதத்தை ஜூன் 24-ம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியர் பெற வேண்டும்.
அதில் மாணவர் பெயர், தேர்வுஎண் மற்றும் தேர்வு மைய எண் ஆகிய விவரங்கள் இடம்பெற வேண்டும். அந்த விருப்பக் கடிதங்களை தேர்வு எண் வாரியாக அடுக்கி ஜூன் 26-ம் அந்தந்த மாவட்ட தேர்வுத் துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாணவர்களிடம் இருந்து பெறப்படும் கடிதங்களின் அடிப்படையில் மறுதேர்வு நடத்துவதா அல்லது துணைத்தேர்வாக நடத்துவதா என்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.