

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் தேர்வுக்கான ஆன்லைன் வகுப்புகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபியில் நேற்று தொடங்கி வைத்தார்.
இதைதொடர்ந்து அவர் கூறியதாவது:
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையும், இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் தென் மண்டல அலுவலகமும் இணைந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் பவுண்டேஷன் தேர்வுக்கான ஆன்லைன் வகுப்புகள் இன்று (நேற்று) தொடங்கியுள்ளது.
வெப்பினார் (webinar) மூலம் நடைபெறும் இவ்வகுப்புகள் இன்று முதல் (நேற்று) செப்டம்பர் 20-ம் தேதி வரை சுமார் 3 மாதங்கள் நடக்கவுள்ளன. திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்தின் 6 நாட்கள் காலை 8 மணியிலிருந்து 11.15 மணி வரையிலும், மாலை 5 மணியிலிருந்து இரவு 8.15 மணி வரையிலும் வகுப்புகள் நடைபெறும்.
பட்டயக்கணக்காளர் பாடத் திட்டத்துக்கு பதிவு செய்து, வரும் நவம்பரில் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் தங்களது பெயர், தந்தையின் பெயர், ஊர், பிறந்த தேதி, அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களுடன் தாங்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து பெற்ற சான்றிதழ் அல்லது பிளஸ் 2 தேர்வு நுழைவுச்சீட்டு ஆகியவற்றை இணைத்து ஸ்கேன் செய்து sircclasses@ical.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய பட்டய கணக்காளர் சங்க துணைத் தலைவர் கே.ஜலபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக கோபியில் தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்களுக்கு கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறும் போது, “கரோனா வைரஸ் பாதிப்பினால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. மாண வர்கள் வீட்டில் இருந்து பாடங்களை படிக்க வசதியாக பாடப்புத்தகங்களை கொடுப்பது குறித்து முதல்வரின் ஒப்புதல் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.