பொறியியல் படிப்புகளுக்கான சிறப்பு இறுதித் தேர்வு எப்போது?- அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்

பொறியியல் படிப்புகளுக்கான சிறப்பு இறுதித் தேர்வு எப்போது?- அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்
Updated on
1 min read

கரோனா பொது முடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் படிப்புகளுக்கான சிறப்பு இறுதித் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் படித்து, 20 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாமல் இருக்கும் நபா்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்காக அண்ணா பல்கலைக்கழகம் சிறப்புத் தேர்வுகளை நடத்த முடிவெடுத்தது. அதன்படி, ஏப்ரல் மாதம் தொடங்குவதாக இருந்த பருவத் தேர்வுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக மாா்ச் 16 முதல் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறுவதாக இருந்த பருவத் தேர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது சிறப்புத் தேர்வுக்காக அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''கரோனா தாக்கம் குறைந்ததும், ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் திறக்கப்பட்டதும் வழக்கமாக நடைபெறும் பருவத் தேர்வுகளுடன் சிறப்பு தேர்வு நடைபெற உள்ளது.

சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களும் அண்ணா பல்கலை. இணையதளத்தில் விவரங்களை அறிந்து, விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பித்து, கட்டணம் செலுத்திய மாணவர்கள், மீண்டும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேர்வு நடைபெறும் தேதி விரைவில் வெளியிடப்படும்'' என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in