சுற்றுச்சூழல் தினம்: ஒரு மாணவர் ஒரு மரம் திட்டத்தில் சேர மத்திய அமைச்சர் பொக்ரியால் அழைப்பு

சுற்றுச்சூழல் தினம்: ஒரு மாணவர் ஒரு மரம் திட்டத்தில் சேர மத்திய அமைச்சர் பொக்ரியால் அழைப்பு
Updated on
1 min read

சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒரு மாணவர் ஒரு மரம் திட்டத்தில் சேர மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அழைப்பு விடுத்துள்ளார்.

சர்வதேச சுற்றுச்சூழல் தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டுக் கடந்த ஆண்டு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ’ஒரு மாணவர் ஒரு மரம்’ திட்டத்தை பள்ளி மாணவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தினார். இதன்படி ஒவ்வொரு மாணவரும் குறைந்தது ஒரு மரத்தையாவது நட வேண்டும்.

இதன்படி நாடு முழுவதும் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் 10 லட்சம் மரங்களை நட்டு வளர்க்கத் திட்டமிடப்பட்டது. அதேபோல சமக்ர சிக்‌ஷா ஜல் சுரக்‌ஷா திட்டத்தின் கீழ், தண்ணீர் சேமிப்பையும் மாணவர்களிடையே அமைச்சர் வலியுறுத்தினார். அதேபோல கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கேந்திர வித்யாலயா பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஒரு கோடி மரங்களை நடவேண்டும் என்று உறுதிமொழி எடுக்கவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘சர்வதேச சுற்றுச்சூழல் தினமான இன்று, இயற்கையை வளப்படுத்தத் தொடர் முயற்சிகளை விழிப்புணர்வுடன் மேற்கொள்வோம். ஆசிரியர்களும் மாணவர்களும் #OneStudentOneTree மற்றும் #SamagraShikshaJalSuraksha திட்டத்தில் இணைவோம். இயற்கையைக் காப்போம்’’ என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in