

கரோனா காலத்தில் களவுபோகும் குழந்தை உரிமைகளைக் காப்பாற்றுங்கள் என்று கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
கரோனா தொற்றை அடுத்து மார்ச் 16 முதல் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மார்ச் 24-ம் தேதி நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, காலவரையறை இல்லாமல், கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் கற்பித்தலை முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில் 100க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், ''குழந்தைகளின் பாதுகாப்பு, வாழ்வுரிமை, கல்வி, வளர்ச்சி ஆகிய அனைத்தும் கரோனா காலத்திலும் அதற்குப் பிறகும் காக்கப்பட வேண்டும். அனைவருக்கும் கல்வி என்பது அவர்களின் உரிமை. இந்தச் சூழலில் ஏற்படும் இடை நிற்றல், குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தை கடத்தல் ஆகியவை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.
அசாதாரண சூழ்நிலைகள் அசாதாரணமான நடவடிக்கைகளைக் கோருகின்றன. அவை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைய வேண்டும். அதேபோல கற்பித்தலில் ஆன்லைன் வழிக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டால், பெரும்பான்மையான குழந்தைகள் குறிப்பாக விளிம்புநிலை சமூகத்தினரின் கல்வி உரிமை மறுக்கப்படும்.
அவர்களுக்கு கல்விக்கான உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். அத்துடன் நிவாரணப் பொருட்களும் உலர் உணவுத் தொகுப்புகளும் அரசால் வழங்கப்பட வேண்டும்.
அதேபோல பொதுமுடக்கக் காலத்தில், குழந்தைகள் வன்முறையில் இருந்தும் பாலியல் தொந்தரவுகளில் இருந்தும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில் டெல்லி பல்கலைக்கழகம், ஜேஎன்யூ, பிற குழந்தை உரிமைகள் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் அருணா ராய், நிகில் டே உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.