

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், விழிப்புணர்வுக் குறும்படங்களை வெளியிட்டுள்ளார்.
உலக நாடுகள் அனைத்திலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. கரோனாவை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
அந்த வகையில், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், கரோனா விழிப்புணர்வுக் குறும்படங்களை வெளியிட்டுள்ளார். ஆங்கிலம் மற்றும் அந்நிய மொழிகள் பல்கலைக்கழகம் (EFLU) சார்பில் இந்தக் குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தனி மனித இடைவெளி, கைகளைச் சுத்தமாகக் கழுவுதல் ஆகிய கருத்துருக்களின் கீழ் இந்தக் குறும்படம் வெளியாகியுள்ளது.
ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, ஜெர்மன், பிரெஞ்சு, அரபி, ஜப்பானிய, சீன, கொரிய மொழிகள், ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் குறும்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் வாயிலாக அமைச்சர் குறும்படங்களை வெளியிட்டார். பல்கலைக்கழக சமூகப் பங்களிப்புத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டம் குறித்த மகிழ்ச்சியையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
EFLU பல்கலைக்கழகத்தின் யூடியூப் பக்கத்தில் இந்த குறும்படங்களைக் காணலாம். பல்கலைக்கழக மாணவர்களே இதில் நடித்துள்ளனர். கரோனா தொற்றைத் தடுக்கப் பெருமளவில் பயன்படுத்தப்படும் வழிமுறைகளான தனி மனித இடைவெளி, கைகளைச் சுத்தமாகக் கழுவுதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் இதில் விளக்கப்பட்டுள்ளது.