

வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கான பொறியியல் சேர்க்கை குறித்த அறிவிப்பு ஏப்ரல் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, எம்ஐடி, கட்டிடவியல் பள்ளி ஆகிய நான்கு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் குழந்தைகளுக்கும், வெளிநாட்டு மாணவா்களுக்கும் சிறப்பு மாணவர் சேர்க்கை உண்டு.
பிளஸ் 2 மற்றும் அதற்கு இணையான படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தேர்வாகும் மாணவர்கள் தங்கிப் படிக்க அண்ணா பல்கலை. வளாகத்தில் உள்ள சர்வதேச மாணவ, மாணவியர் விடுதிகள் உள்ளன.
இதற்கிடையே வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கான கலந்தாய்வு அறிவிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கிவிடும். கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக இதற்கான அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், 2020- 21 ஆம் கல்வியாண்டில் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கான பொறியியல் சேர்க்கை குறித்த அறிவிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏப்ரல் மூன்று அல்லது நான்காவது வாரத்தில் பல்கலைக்கழக இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.