Published : 03 Apr 2020 10:28 AM
Last Updated : 03 Apr 2020 10:28 AM

தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: மாணவர் சேர்க்கை ஒத்திவைப்பு

தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் நடைபெறும் மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் அல்லாத தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மழலையர் அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் படிக்க முடியும்.

இதற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் பணிகள் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி மே மாத இறுதியில் முடிவடையும். இந்நிலையில் இந்த முறை கரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தனியார் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ''கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகின்றன.

அதற்கான மாற்றுத் தேதி விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். அதற்கேற்ப முதன்மைக் கல்வி அலுவலர்கள் பின்னர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துப் பள்ளிகளுக்கும் தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தனியார் பள்ளி மாணவர் சேர்க்கைகளை முன்கூட்டியே நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x