

கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்காக மக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன. அதனையேற்று தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் போன்றோர் தங்களால் இயன்ற நிதி உதவியை அளித்து வருகிறார்கள்.
அவ்வகையில் எல்லோருக்கும் முன் உதாரணமாக பள்ளி மாணவர்கள் தங்களது சிறுசேமிப்பு நிதியிலிருந்து தலா 100 ரூபாய் வீதம் சேகரித்து 2,800 ரூபாயை முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், கருப்பம்புலம் வடகாடு ஞானாம்பிகா அரசு உதவி தொடக்கப் பள்ளி மாணவர்கள்தான் இப்படி தங்களது மனிதாபிமானத்தைக் காட்டி இருக்கிறார்கள். இப்பள்ளியில் மொத்தம் 28 மாணவர்கள் படிக்கிறார்கள்.
இவர்கள் அத்தனை பேரும் செவ்வாய்க் கிழமை தங்களது பள்ளிக்கு முகக் கவசம் அணிந்தபடி வந்தனர். சமூக இடைவெளியோடு மூன்றடி தூரம் இடைவெளி விட்டு வரிசையில் வந்த இவர்கள், பள்ளியின் நுழைவு வாயிலில் கைகளைச் சோப்பு கொண்டு இருபது வினாடிகள் தேய்த்துக் கழுவி சுத்தம் செய்தனர்.
பிறகு, வரிசையில் காத்திருந்து அங்கே வைக்கப்பட்டிருந்த உண்டியலில் தலா நூறு ரூபாய் வீதம் செலுத்திவிட்டு அமைதியாகக் கலைந்து சென்றனர். இப்பணம் அவர்களுடைய சஞ்சாய்க்கா சிறுசேமிப்புத் திட்டத்தில் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த பணம்.
மாணவர்கள் மனம் உவந்து கொடுத்த இந்த நிதியை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்ட ஆசிரியர்கள், அதை அப்படியே தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வங்கி மூலமாக அனுப்பி வைத்தனர். இந்த மாணவர்கள் அனைவரும் 5 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.