Last Updated : 31 Mar, 2020 11:27 AM

 

Published : 31 Mar 2020 11:27 AM
Last Updated : 31 Mar 2020 11:27 AM

கரோனா எதிரொலி: உ.பி. மாணவர்களுக்கு இணையதள வகுப்புகள் தொடக்கம்

கரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பல்கலைக்கழகங்கள் மற்றும் திறனாய்வுத் தேர்விற்கான தனியார் பயிற்சி நிலையங்களில் இணையதள வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

நாட்டின் அனைத்துக் கல்வி நிலையங்களும் ஏப்ரல் 14 -ம் தேதி வரை மூடப்பட்டுள்ள நிலையில், வீட்டில் இருந்தே பணியாற்றும்படி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவுறுத்தி இருந்தது. எனினும் அதற்குப் பிறகும் கல்வி நிறுவனங்கள் உடனடியாகத் திறக்கப்படுவது சந்தேகமாகவே உள்ளது. இதனால், தங்கள் வீடுகளில் அடைந்து கிடக்கும் மாணவர்களுக்காக உ.பி.யில் ஒரு புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி, உ.பி.யின் தலைநகரில் உள்ள லக்னோ பல்கலைக்கழகம், பாபாசாஹேப் பீமாராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மாணவர்களுக்கு இணையதளம் மூலமாக வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ இணையதளத்திடம் லக்னோ பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளரான துர்கேஷ் ஸ்ரீவாஸ்தவா கூறும்போது, ''ஆரம்பக்கட்டமாக லைப்ரரி சயின்ஸ், சூழலியல் உயிரி வேதியியல் ஆகிய பாடப் பிரிவினருக்கு பேராசிரியர்கள் இணையத்தின் மூலம் வகுப்புகளை எடுத்து வருகின்றனர்.

மாணவர்கள் இவற்றைத் தங்கள் வீட்டில் இருந்தபடியே லேப்டாப்புகளில் கவனித்துப் பலனடைகின்றனர். இதன் பலனைப் பொறுத்து மற்றவர்களுக்கும் இந்த முறை தொடங்கப்படும்'' எனத் தெரிவித்தார்.

இதேபோல் அம்பேத்கர் பல்கலைக்கழகத்திலும் சில பாடப்பிரிவுகளுக்கு இணையதள வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இவை முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் 'ஜூம் க்ளவுட்' எனும் தனியார் நிறுவனங்களின் இணையதளங்கள் வாயிலாக எடுக்கப்பட்டு வருகின்றன.

இதில், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் காலம் வீணாகாதபடி குறிப்பிட்ட நேரங்களில் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இதே முறையை திறனாய்வு மற்றும் நுழைவுத் தேர்வுகளுக்காகப் பயிற்சி தரும் உ.பி.யின் பல பிரபல தனியார் கல்வி நிறுவனங்களும் கடைப்பிடிக்கின்றன.

கரோனா நூல்கள்
இதனிடையே, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் கரோனா மீதான புதிய பாடத்திட்டங்கள் மற்றும் நூல்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்துறையின் கீழ் செயல்படும் ’நேஷனல் புக் டிரஸ்ட்’ நிறுவனம் சார்பில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய குறிப்புகளைத் திரட்டி கூடுதல் தகவல்களுடன் நூல்கள் வெளியாக உள்ளன. இவை, உளவியல், சமூகவியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் மாணவர்களுக்குப் பயனுள்ள வகையில் படைக்கப்பட உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x