Last Updated : 26 Mar, 2020 01:37 PM

 

Published : 26 Mar 2020 01:37 PM
Last Updated : 26 Mar 2020 01:37 PM

கரோனா நிவாரணத்துக்காக ரூ.2 கோடி: 5 ஆயிரம் அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் வழங்க முடிவு

தமிழக அரசின் கரோனா தடுப்பு நிவாரண நடவடிக்கைகளுக்கு, 5 ஆயிரம் அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் ரூ.2 கோடி வழங்க முடிவு செய்துள்ளதாக, தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் த.வீரமணி தெரிவித்தார்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து, தேவையின்றி வெளியில் நடமாடக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்றும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அன்றாடம் வேலை செய்து வாழ்க்கை நடத்தும் ஏழை மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள இந்த நிவாரண உதவி வழங்கப்படுகிறது.

இதேபோல் சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் பல்வேறு இடங்களில் உணவு கிடைக்காத ஏழைகளுக்கு, உணவுப் பொருட்கள் தயாரித்து வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் சுமார் 5 ஆயிரம் கல்லூரி ஆசிரியர்கள் தங்களுடைய ஒருநாள் ஊதியத்தை கரோனா தடுப்பு நிவாரண நடவடிக்கைகளுக்காக வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவரும், கோவை அரசு கலைக் கல்லூரி உளவியல் துறைத் தலைவருமான இணைப் பேராசிரியர் த.வீரமணி, 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது:

''தமிழக அரசின் உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 119 அரசு கலைக் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் சுமார் 5 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகிறோம். நாங்கள் அனைவரும் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தில் உறுப்பினர்கள். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் நலன், மாணவர் நலன் மற்றும் சமூக நலன் காத்திட, அரசுடன் இணக்கமாக செயல்பட்டு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

இந்நிலையில் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தி, தமிழக மக்களைப் பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சை போன்ற பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வரும் முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுக்கும், அமைச்சர்களுக்கும், தமிழ்நாடு அரசுக் கல்லூரி கல்லூரி ஆசிரியர் கழகம் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.

வீரமணி

கடந்த காலங்களில் பேரிடர்களின்போது சமூகப் பொறுப்புடன் செயல்பட்ட இக்கழகமானது, தற்போது கொடிய கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் பணிக்காக, ரூ.2 கோடி நிவாரண நிதி வழங்க முடிவு செய்துள்ளது.

இதற்காக அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தைக் கொடுக்க முன்வந்துள்ளனர். இது குறித்து தமிழக முதல்வருக்குக் கழகம் சார்பில் கடிதம் அனுப்பியுள்ளோம். இம்மாத ஊதியத்தில் இருந்து, ஒருநாள் ஊதியத்தைப் பிடித்தம் செய்து கொள்ளுமாறு உயர் கல்வித்துறைக்கும் கடிதம் அனுப்பி உள்ளோம்''.

இவ்வாறு தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் வீரமணி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x