

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஹெல்ப்லைன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பொதுத் தேர்வுகள் காலவரையரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, சிபிஎஸ்இ ஹெல்ப்லைன்களை அறிவித்துள்ளது.
தொலைபேசி மூலம் மாணவர்கள் கரோனா குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம். காலை 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மார்ச் 31-ம் தேதி வரை ஹெல்ப்லைன்கள் செயல்படும்.
இது தொடர்பாக சிபிஎஸ்இ பொதுச் செயலாளர் அனுராக் த்ரிபாதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''10 மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கப்படும். இது ஒவ்வோர் ஆண்டும் பொதுத் தேர்வுக்கு முன்னதாக அளிக்கப்படும் ஒன்றாகும். 23-வது முறையாக இந்த ஆண்டு, கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
1800118004 என்ற எண்ணில் மாணவர்கள் காலை 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை அழைக்கலாம்.
கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வது, சமூகப் பரவலைக் குறைப்பது, கரோனா தொற்றுக்கு எதிரான முதலுதவி ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பயிற்சி பெற்ற நபர்களைக் கொண்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.
வீடுகளில் பயனுள்ள மற்றும் உபயோகமான செயல்களில் மாணவர்கள் ஈடுபடவும் அவர்கள் ஊக்குவிப்பர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.