

உலக அரங்கில் இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெற்று இந்தியாவின் பெயரை தலைநிமிரச் செய்தவர் சர்.சி.வி.ராமன். அவருடன் பணியாற்றிய இயற்பியல் விஞ்ஞானி மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் போது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை (Raman effect) கண்டு பிடித்ததிற்காக இவர் 1930ல் நோபல் பரிசு பெற்றார்.
இந்த இயற்பியல் கண்டுபிடிப்பை உருவாக்க சர்.சிவி.ராமனுடன் இணைந்து இயற்பியல் அறிஞர் கே.எஸ்.கிருஷ்ணன் என்ற இயற்பியல் விஞ்ஞானியும் பங்கு கொண்டார்.
ராமனுடன் இணைந்து இவர், 1927ம் ஆண்டு முதல் 1929ம் ஆண்டு வரை ஒளிவிலகல் சம்பந்தமாக பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை உருவாக்கியுள்ளார்.
இவர் ஒரு தமிழர் என்பதோடு, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு விழுப்பனூர் கிராமத்தில் 1898-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி விவசாய குடும்பத்தில் பிறந்துள்ளார். அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து உயர்நிலைப்பள்ளியை முடித்த அவர் 1916-ம் ஆண்டில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் படித்துள்ளார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அவர் ராமன்விளைவு கண்டுபிடிக்க உதவியாக இருந்தக் கருவி, தற்போதும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உள்ளது. அதை மாணவர்கள், ஆர்வமாக பார்வையிட்டு செல்கின்றனர்.
இதுகுறித்து அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் கூறியதாவது:
சர்.சி.வி.ராமன், அவரது ராமன் விளைவு உருவாகுவதற்கு கே.எஸ்.கிருஷ்ணனும் ஒரு காரணமாக இருந்தவர். இவருக்கும் சேர்த்து நோபல் பரிசு வழங்க வேண்டும் என்ற கருத்து அப்போது நிலவியது. இவர் சுதந்திர இந்தியாவில் முன்னாள் பிரதமர் நேருவுக்கு மிக நெருக்கமானவராக இருந்தவர். அவரது விஞ்ஞான ஆலோசகராக செயல்பட்டவர்.
விடுதலை பெற்ற காலகட்டத்தில் பொறியியல் மற்றும் அறிவியல் ஆய்வுக்கூடங்கள், தொழிற்சாலைகள் அமைப்பதில் பிரதமர் நேரு, கே.எஸ்.கிருஷ்ணன் அறிவியல் பேராற்றலைப் பயன்படுத்திக் கொண்டார்.
அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் முடித்த கே.எஸ்.கிருஷ்ணன், சென்னையில் கிறிஸ்தவ கல்லூரியில் முதுகலை இயற்பியல் படித்துள்ளார்.
1920ம் ஆண்டு கொல்கத்தாவில் சர்சிவி. ராமனை சந்தித்து அவர் பணியாற்றிய இந்தியன் அசோசியேஷன் ஆஃப் கல்டிவேஷன் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தில் அவரது ஆய்வுக்கூடத்தில் பணிபுரிந்துள்ளார்.
சர்சிவி.ராமன், போனவுடனே இவரை ஆய்வுப்பணியில் சேர்ந்துக் கொள்ளவில்லை. 2 ஆண்டுகள் பயிற்சிக்கு பிறகே 1922ல் தன்னுடைய ஆய்வுப்பணிக்கு சேர்த்துக் கொள்கிறார். இங்கு பணிபுரிந்தது கே.எஸ்.கிருஷ்ணன் வாழ்க்கையை மாற்றியது.
காலை 6 மணிக்கு ஆய்வுக்கூடத்திற்கு சென்றுவிடும் கே.எஸ்.கிருஷ்ணன், பகல், இரவு நேரம் தெரியாமல் வேலை பார்த்தார்.
கிருஷ்ணன், அறிவியல் அறிஞர் பணியோடு மிக சிறந்த கால்பந்து வீரராக கல்கத்தாவில் ஈடன்காடனில் பல போட்டிகளில் விளையாடியுள்ளார். 1928ம் பங்களாதேஷில் டாக்கா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக பணிபுரிந்தார்.
அதன்பிறகு 1933ல் கல்கத்தா திரும்பிய கே.எஸ்.கிருஷ்ணனை, 1937ம் ஆண்டில், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கேவண்டிஷ் லேபரட்ரி தலைவர் ரூதர்போர்டு இவரை அங்கு பேச அழைத்தார்.
அதைத் தொடர்ந்து லண்டனில் ராயல் இன்ஸ்டியூட்டில் இயற்பியல் பற்றி சொற்பொழிவாற்ற அழைத்தனர். 1942ல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை தலைவராக பணிபுரிந்தார். 1947ல், மத்திய அரசின் தேசிய இயற்பியல் நிலையத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
1954-ல் மத்திய அரசின் பத்மபூஷன் விருது, 1961ல் சாந்தி ஸ்வருப் பட்நாயக் விருது பெற்றுள்ளார். 1955ல், அமெரிக்காவில் நேஷனல் அகடாமி ஆஃப் சயின்ஸ் கெஸ்ட் ஸ்பீக்கராக சென்றார். இந்த அகடாமியில்
லண்டன், நெதர்லாந்தில் இருந்துதான் பேராசிரியர்களை அழைப்பதுதான் பாரம்பரியம். ஆனால், இவருக்கு அந்த பெருமை கிடைத்தது.
டெல்லியில் ஒரு சாலைக்கு கே.எஸ்.கிருஷ்ணன் பெயரை வைத்து மத்திய அரசு அவரை கவுரவப்படுத்தியது.
இவர், எங்கள் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் படித்ததும், சர்.சி.வி.ராமனின் ஆய்வுக்கு அச்சாரமாக இவரது இயற்பியல் கருவி, எங்கள் கல்லூரியில் இன்னும் பாதுகாப்பாக இருப்பதும் எங்களுக்கு பெருமையாக உள்ளது.
அவரது நினைவைப் போற்ற, புதிதாகக் கட்டப்பட உள்ள இயற்பியல் வளாகத்திற்கு அவரது பெயரை சூட்டவும், ஆண்டுதோறும் அவரது பெயரில் இயற்பியல் நிகழ்வுகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.